- உயர் நீதிமன்றம்
- அறக்கட்டளைகள் திணைக்களம்
- மயிலை அறுபத்து மூன்று விழா
- சென்னை
- ரோட்டிக்கார சத்திரம்
- 63 நாயன்மார் திருவிழா
- பிரம்மோத்சவம்
- மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில்
- கபாலீஸ்வரர் கோவில்
சென்னை: சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பிரமோற்சவத்தின் போது, 63 நாயன்மார்கள் விழாவில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கு உணவு அளிப்பதற்காக 1834ம் ஆண்டு ரொட்டிக்காரச் சத்திரம் என்ற அறக்கட்டளை தொடங்கப்பட்டது. இந்த அறக்கட்டளைக்கு சொந்தமாக கபாலீஸ்வரர் கோயில் தெற்கு மாட வீதியில், 9,198 சதுர அடி பரப்பில் நிலம் மற்றும் கட்டிடம் உள்ளது. இதில், ஒரு திருமண மண்டபமும், மூன்று கடைகளும் உள்ளன.
இந்நிலையில், அந்த நிலத்தை, பயன்படுத்தி வந்த ஜெயசிங்க் என்பவர் அதனை தனது மனைவி, மகன்களுக்கு எழுதி கொடுத்துள்ளார். இதையடுத்து, சட்டவிரோதமாக பத்திரப்பதிவு செய்யப்பட்ட அறக்கட்டளைக்கு சொந்தமான அந்த சொத்தில், ஜெயசிங்கின் குடும்பத்தினர் கட்டுமானங்கள் மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுத்து வருவதால், அந்த நிலத்தை மீட்குமாறும், ஆக்கிரமிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் சென்னை ஆர்.ஏ.புரத்தை சேர்ந்த விவேக் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி பி.பி.பாலாஜி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.ஹரிஷ்குமார், பக்தர்கள் நலனுக்காக ஒதுக்கப்பட்ட இந்த சொத்தை ஆக்கிரமித்துள்ளது சட்டவிரோதமானது. ஆக்கிரமிப்பாளர்களை அகற்றி சொத்தை மீட்குமாறு உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த பிரச்னை தொடர்பாக ஒரு வாரத்தில் விரிவான மனுவை அறநிலையத்துறை இணை ஆணையருக்கு மனுதாரர் தர வேண்டும். மனுதாரரின் மனுவின் அடிப்படையில் விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கையை அறநிலையத்துறை இணை ஆணையர் எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
