×

சம்பா நெற்பயிர், இதர பயிர்களை டிசம்பர் 1ம் தேதி வரை காப்பீடு செய்ய அனுமதி: தமிழக அரசு தகவல்

சென்னை: வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பு: 2025-26ம் ஆண்டில், பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டு திட்டம் தமிழ்நாட்டில் குறுவை, சம்பா, நவரை பருவத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தேசிய பயிர் காப்பீட்டு வலைதளத்தில், சம்பா நெற்பயிர் காப்பீடு செய்ய 2025, செப்டம்பர் மாதம் முதல் நவம்பர் 15ம் தேதி வரை காலநிர்ணயம் செய்யப்பட்டு பதிவு நடைபெற்று வந்தது.

எனினும் தொடர் மழை, வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் போன்றவற்றால் சம்பா நெற்பயிர் காப்பீடு தாமதமான காரணத்தால், விவசாயிகளின் கோரிக்கைக்கிணங்க தமிழ்நாடு அரசு எடுத்த தொடர் முயற்சிகளால் 2025 நவம்பர் 30ம் தேதி வரை ஒன்றிய அரசால் கால நீட்டிப்பு செய்யப்பட்டது. இதுநாள்வரை, 31.33 லட்சம் ஏக்கர் பரப்பில் சம்பா நெற்பயிர் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு, 7.95 லட்சம் விவசாயிகளால் 19.06 லட்சம் ஏக்கர் காப்பீடு செய்யப்பட்டுள்ளது.

தற்போது 2025-26ம் ஆண்டு சம்பா மற்றும் நவரை பருவ பயிர்களை காப்பீடு செய்ய விதிகளை தளர்வு செய்து ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. எனவே, 2025 நவம்பர் 30ம் தேதி வரை காப்பீடு செய்ய காலநிர்ணயம் செய்யப்பட்ட பயிர்களை இதுவரை காப்பீடு செய்யாத விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் டிசம்பர் 1ம் தேதிக்குள் (நாளை) பதிவு செய்து பயனடையலாம். மேலும், நில உரிமையுள்ள அனைத்து விவசாயிகளும் உடனடியாக இ-சேவை மையத்தில் விவசாயி பதிவு மூலம் வழங்கப்படும் விவசாயிகள் அடையாள எண் பெற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

* பயிர் காப்பீட்டு திட்டத்தில் ரூ.697 கோடி வங்கியில் வரவு
பயிர்க் காப்பீட்டு திட்டத்தில், 2024-25ம் ஆண்டிற்கான இழப்பீட்டு தொகையாக ரூ.794 கோடி ஒப்பளிக்கப்பட்டு இதுவரை, 4 லட்சம் விவசாயிகளின் வங்கி கணக்குகளில் ரூ.697 கோடி வரவு வைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள இழப்பீட்டு தொகை ஒன்றிய அரசின் பங்குதொகையான ரூ.67 கோடி பெறப்பட்டவுடன் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.

Tags : Tamil ,Nadu ,Chennai ,Agriculture ,Welfare Minister ,M.R.K. Panneerselvam ,Prime ,Tamil Nadu ,Kuruvai ,Samba ,Navari ,Crop ,
× RELATED மகளிர் சுய உதவிக் குழுக்கள்...