×

தக்காளி, வெங்காயத்திற்கு பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

உடுமலை,ஜன.11: மடத்துக்குளம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் திவ்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மடத்துக்குளம் பகுதியில் காய்கறி பயிர்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக தக்காளி, வெங்காயம் அதிகளவு பயிரிடப்படுகிறது. இந்த இரண்டு பயிர்களுக்கும் தற்போது பிரதமரின் காப்பீட்டு திட்டத்தின்கீழ் ராபி பருவத்துக்கு காப்பீடு செய்யலாம்.பயிர் கடன் பெறும் அனைத்து விவசாயிகளும் இத்திட்டத்தில் கட்டாயம் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். பயிர் கடன் பெறாத விவசாயிகளும் விருப்பத்தின் பேரில் சேரலாம். விதைப்பை தவிர்த்தல், விதைப்பு தோல்வியுறுதல், பயிரிட அபாயம் ஏற்படும் நிலை, விதைப்பு முதல் அறுவடை வரையுள்ள பயிர் காலத்துக்கு, அறுவடைக்குப்பின் ஏற்படும் இழப்பு, புயல், ஆலங்கட்டி மழை, மண் சரிவு, வெள்ளம் போன்ற உள்ளூர் இயற்கை இடர்பாடுகளினால் ஏற்படும் இழப்பு ஆகியவற்றுக்கு பயிர் காப்பீடு பெறலாம்.

தக்காளி ஒரு ஏக்கருக்கு பிரிமியம் தொகை ரூ.1417 செலுத்த வேண்டும். கடைசி நாள் வரும் மார்ச் 1-ம்தேதி. இழப்பீடாக ஒரு ஏக்கருக்கு ரூ.28,250 வழங்கப்படும். வெங்காயத்துக்கு ஒரு ஏக்கருக்கு பிரிமியம் தொகை ரூ.2112 செலுத்த வேண்டும். கடைசி நாள் வரும் பிப்ரவரி 15-ம்தேதி. இழப்பீடாக ஏக்கருக்கு ரூ.42,250 வழங்கப்படும். சிட்டா, அடங்கல், உரிமைச் சான்று, ஆதார், வங்கி கணக்கு நகல், மார்பளவு புகைப்படம் ஆகியவற்றுடன் பொது இ சேவை மையத்தில் காப்பீடு தொகை செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு துங்காவி குறுவட்டத்தில் உள்ள துங்காவி, மெட்ராத்தி, காரத்தொழுவு, தாந்தோணி, கணியூர், கடத்தூர், ஜோத்தம்பட்டி, மைவாடி பகுதி விவசாயிகள் தோட்டக்கலை அலுவலர் தாமோதரனை 96598 38787 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

மடத்துக்குளம் குறுவட்டத்தில் உள்ள அக்ரகாரம் கண்ணாடிபுத்தூர், சங்கராமநல்லூர், சர்கார் கண்ணாடிபுத்தூர், கொழுமம், குமரலிங்கம், பாப்பான்குளம், சோழமாதேவி, வேடபட்டி பகுதியை சேர்ந்த விவசாயிகள் உதவி தோட்டக்கலை அலுவலர் ஸ்ரீதரனை 75388 77132 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED தேர்தல் விதிமீறல் அரசியல் கட்சியினர் மீது வழக்கு