×

டவுன் பஸ் நிறுத்தப்பட்டதால் மறியல் செய்ய முடிவு

பெ.நா.பாளையம், ஜன.11: கோவை அருகே 38 ஏ மற்றும் 4 ஏ டவுன் பஸ் சர்வீஸ் நிறுத்தப்பட்டதை கண்டித்து அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டம் அறிவித்துள்ளனர். காந்திபுரம், உக்கடம் மற்றும் செல்வபுரம் ஆகிய பகுதிகளுக்கு துடியலூர், என்.ஜி.ஜி.ஓ. காலனி வெற்றிலைக்காளி பகுதியில் இருந்து 38 ஏ மற்றும் 4 ஏ இரண்டு டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. அதிகாலை 5.15 மணி முதல் இரவு 10:30 மணி வரை எட்டு முறை எதிர் எதிராக சென்று வந்தன.
இதில், பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர், வேலைக்கு செல்பவர்கள் என நூற்றுக்கணக்கானோர் பயணம் செய்து வந்தனர். மேலும், என்.ஜி.ஜி.ஓ.காலனி, ஸ்டேட் பேங்க் காலனி, வெற்றிலை காளிபாளையம் போன்ற கிராமங்களுக்கு இந்த இரண்டு டவுன் பஸ்கள் மட்டுமே சென்று வந்தன.

கொரோனா ஊரடங்கிற்கு பிறகு ஒரு பஸ் மட்டும் வந்தது. ஆனால், தற்போது கடந்த ஒரு மாதமாக 38 ஏ மற்றும் 4 ஏ இரண்டு பஸ்சும் திடீரென நிறுத்தப்பட்டது. இதனால், வேலைக்கு செல்பவர்கள் 3 முதல் 4 கி.மீ. தூரம் நடந்து சென்று வேறு பஸ் ஏற வேண்டி உள்ளதால் பொதுமக்கள் மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக, போக்குவரத்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, நிறுத்தப்பட்ட இரண்டு டவுன் பஸ்களையும் உடனடியாக இயக்காவிட்டால் துடியலூரில் சாலை மறியல் போராட்டம் நடத்தப் போவதாக குடியிருப்பு நல சங்கங்கள் மற்றும் அப்பகுதி மக்கள் அறிவித்துள்ளனர். மேலும், இந்த இரண்டு பஸ்சுமே கோவையில் மற்ற பகுதிகளில் நம்பர் மாற்றி இயக்கப்படுகிறது. எனவே, அதிகாரிகள் தலையிட்டு உடனடியாக இரண்டு டவுன் பஸ்களையும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Town ,
× RELATED திமுக நிர்வாகி மீது பாமகவினர் தாக்குதல் போலீசார் தடியடி