×

சேலம் மத்திய சிறையில் கைதிக்கு செல்போன், போதை மாத்திரை கொண்டு சென்ற வார்டன் அதிரடி கைது: சஸ்பெண்ட் நடவடிக்கையும் பாய்ந்தது

சேலம்: சேலம் மத்திய சிறையில் கைதிக்கு 3 செல்போன், கஞ்சா கொண்டு சென்ற சிறை வார்டனை சிறை அதிகாரிகள் மடக்கி பிடித்தனர். சேலம் மத்திய சிறையில் 1200 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் வசதியுள்ள கைதிகள் ரகசியமாக செல்போன் பயன்படுத்தி வருகின்றனர். அவர்களுக்கு சிறை வார்டன்கள், அதிகாரிகள் உடந்தையாக இருந்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இந்நிலையில் கைதிகளுக்கு செல்போனை கொண்டு வந்து கொடுப்பது சிறை வார்டன்கள் என கண்டுபிடித்த அதிகாரிகள் கையும் களவுமாக பிடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டனர். இதற்கிடையில் சேலம் கிச்சிப்பாளையத்தை சேர்ந்த கைதி ஒருவர் ரகசிய தகவலை அதிகாரிகளிடம் தெரிவித்தார். ஓரிரு நாட்களில் செல்போன் வரும் எனவும் கொண்டுவரும் வார்டன் பற்றியும் கூறினார்.

இதையடுத்து சிறை கண்காணிப்பாளர் வினோத் தலைமையிலான தனிப்படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம் மோகனூரைச் சேர்ந்த செல்வராசு(34) என்ற வார்டன் நேற்று முன்தினம் 6 மணிக்கு வேலைக்கு வந்தார். அவரை ரகசியமாக பின்தொடர்ந்தனர். நேற்று இரவு அங்குள்ள ஓய்வு அறைக்கு சாப்பிட சென்றார். மறுநாள் (நேற்று) பணி முடிந்து சென்றிருக்க வேண்டும். என்றாலும் அவர் இன்னொரு பணியை சேர்த்து பார்த்தார். வார்டன்கள் தங்கும் ஓய்வு அறையில் அவர் கொண்டு வந்த பையை தனிப்படையினர் சோதனை செய்தனர். அங்கு டேப்பால் சுற்றப்பட்ட 2 பொட்டலம் இருப்பது தெரியவந்தது. என்றாலும் அதனை அவர் யாரிடம் கொடுக்கிறார்? அப்போது பிடிக்க வேண்டும் என காத்திருந்தனர். ஆனால் வார்டன் செல்வராசு, பல முறை முயன்றும் செல்போனை உள்ளே கொண்டு செல்ல அவருக்கு சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை.

நேற்று பகல் 12 மணிக்கு பணியை முடித்துவிட்டு, பையை எடுத்துக்கொண்டு அவர் வீட்டிற்கு புறப்பட்டார். அப்போது வாக்கி டாக்கியில் செல்வராசுவை அலுவலகத்திற்கு வருமாறு அதிகாரிகள் அழைத்தனர். மெயின் கேட்டில் இருந்த தனிப்படையினர் அவரை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றனர். அவர் வைத்திருந்த பையை சோதனை செய்து அதில் இருந்த 2 பொட்டலத்தையும் எடுத்து பிரித்து பார்த்தனர். உள்ளே 3 சிறிய வகை செல்போன்கள், 50 போதை மாத்திரைகள், 80 கிராம் கஞ்சா, 50 கிராம் ஹான்ஸ், 1 சிம், 3 போதை பேப்பர் ஆகியவை இருந்தது. அவரது செல்போனை வாங்கி பார்த்தபோது, கிச்சிப்பாளையத்தை சேர்ந்த ஒருவரது செல்போன் நம்பர் இருந்தது. அவர் ஏற்கனவே சிறையில் இருந்து வெளியே சென்றவர். அவர் தான் சிறைக்குள்ளே இருக்கும் இன்னொரு கைதிக்கு கொடுக்க சொன்னது தெரியவந்தது.

இதையடுத்து சிறை வார்டன் செல்வராசுவை பிடித்து அஸ்தம்பட்டி போலீசில் ஒப்படைத்தனர். அஸ்தம்பட்டி போலீசார் வார்டன் செல்வராசுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் வார்டன் செல்வராசுவை அதிரடியாக சஸ்பெண்ட் செய்து சிறை கண்காணிப்பாளர் வினோத் உத்தரவிட்டார்.

Tags : SALEM CENTRAL PRISON ,Salem ,Salem Central Jail ,
× RELATED பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில்...