பி1, ஜி1. போலீஸ் ஸ்டேஷன்களில் இன்ஸ்பெக்டர்கள் பணியிடம் காலி

ஊட்டி, ஜன. 11: ஊட்டி பி1, ஜி1 மற்றும் மஞ்சூர் உள்ளிட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் இன்ஸ்பெக்டர்கள் பணியிடம் காலியாக உள்ளதால் குற்ற சம்பவங்களை கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஊட்டி நகரில் பாதுகாப்பு பணி அனைத்தும் ஊட்டி நகர மத்திய போலீஸ் ஸ்டேஷன் (பி1) மூலம் மேற்கொள்ளப்படுகிறது. லவ்டேல் சாலை சந்திப்பு முதல் மத்திய பஸ் நிலையம் உட்பட நகர பகுதிகள் அனைத்தும் இந்த  போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குள் வருகிறது. இந்நிலையில் இங்கு இன்ஸ்பெக்டராக இருந்த ஜெயபாலன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு டிஎஸ்பி., பதவி உயர்வு பெற்று சென்று விட்டார். கடந்த இரு மாதங்களுக்கு மேலாக இந்த போலீஸ் ஸ்டேஷனுக்கு  இன்ஸ்பெக்டர் நியமிக்கப்படாமல் காலியாகவே உள்ளது.

இப்பணியை ஊட்டி ஜி1 இன்ஸ்பெக்டரே கவனித்து வந்தார். இந்நிலையில் ஊட்டி காந்தல், பிங்கர்போஸ்ட் உள்ளிட்ட புறநகர் பகுதிகள் ஊட்டி நகர மேற்கு  போலீஸ் ஸ்டேஷன் (ஜி1) கட்டுப்பாட்டில் வருகிறது. இந்த போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் விநாயகம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதன் காரணமாக இந்த  போலீஸ் ஸ்டேஷனிலும் இன்ஸ்பெக்டர் பணியிடம் காலியாக உள்ளது. மாவட்ட தலைநகரில் அமைந்துள்ள இரு  போலீஸ் ஸ்டேஷனிலும் இன்ஸ்பெக்டர் பணியிடம் காலியாக உள்ளது. இரு  போலீஸ் ஸ்டேஷனிலும் இன்ஸ்பெக்டர் பணியை பொறுப்பு அதிகாரியே கவனித்து வருகிறார். இதன் காரணமாக குற்ற சம்பவங்களை கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதேபோல் மஞ்சூர்  இன்ஸ்பெக்டர் பணியிடமும் காலியாகவே உள்ளது. இதனிடையே தமிழக சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், தேர்தலுக்கு முன்பு  போலீஸ் ஸ்டேஷன்களில் காலியாக உள்ள இன்ஸ்பெக்டர்கள் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories:

>