×

ஊட்டி எட்டின்ஸ் சாலையில் கால்வாய் தூர்வாரும் பணி நிறுத்தம்

ஊட்டி, ஜன. 11:  ஊட்டி எட்டின்ஸ் சாலையில் மண் அடைப்பு ஏற்பட்டுள்ள கால்வாய்களில் தூர்வாரும்  பணி கடந்த இரு மாதங்களாக பாதியில் நிற்கிறது. இப்பணியை மீண்டும் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
ஊட்டியில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பெய்த கனமழை காரணமாக ஊட்டி நகரின் பல இடங்களில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் புகுந்தது. ஊட்டி கிரீன்பீல்டு பகுதியில் கோடப்பமந்து கால்வாயை ஒட்டியுள்ள சுமார் 30க்கும் மேற்பட்ட குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்தது. நகரில் மழைநீர் மற்றும் கழிவுநீர் வழிந்தோட வசதியாக அமைக்கப்பட்ட பெரும்பாலான கால்வாய்களில் மண் மற்றும் பிளாஸ்டிக் குப்பைகள் அடைத்துள்ளன. இவை முறையாக அகற்றப்படாததால், மழை நீர் செல்ல வசதியின்றி குடியிருப்புகளுக்குள் புகுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதனை தொடர்ந்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா அப்பகுதியில் ஆய்வு செய்து கால்வாயில் குவிந்துள்ள மண் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு நகராட்சி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இதனை தொடர்ந்து நகராட்சி சார்பில் எட்டின்ஸ் சாலையில் கழிவுநீர் செல்ல வழியின்றி மண் மூடி காணப்பட்ட கால்வாய்களை தூர்வாரி சரி செய்யும் பணிகள் துவக்கப்பட்டது. இதற்காக சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள பாதாள கால்வாய்கள் தோண்டப்பட்டு அதில் குவிந்துள்ள மண் குவியல்கள் அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆரம்பத்தில் வேகமாக இப்பணிகள் மேகொள்ளப்பட்ட நிலையில் சேரிங்கிராஸ் தபால் நிலையம் துவங்கி சுமார் 300மீட்டர் தூரத்திற்கு கால்வாய்கள் தூர்வாரி ஆழப்படுத்தப்பட்டது.

பின்னர் கான்கீரிட் அமைக்கப்பட்டு சீரமைக்கப்பட்டது. அதன் பின் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. அலங்கார் தியேட்டர் அருகே பணிகள் பாதியில் நிற்கின்றன. கால்வாயில் இருந்து அகற்றப்பட்ட மண் சாலையோரம் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இரு மாதங்களாக கால்வாய் சீரமைப்பு பணிகள் பாதியிலேயே நிற்கின்றன. இதனால் கனமழை பெய்யும் சமயங்களில் மீண்டும் கீரின்பீல்டு பகுதியில் மழைநீர் புக கூடிய அபாயம் நீடிக்கிறது. எனவே கால்வாய் தூர்வாரும்  பணிகளை மீண்டும் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு உள்ளது. இதுகுறித்து கிரீன்பீல்டு பகுதி குடியிருப்புவாசிகள் கூறுகையில், கடந்த அக்டோபரில் பெய்த கனமழையால் இப்பகுதியில் உள்ள குடியிருப்புகளில் மழைநீர் புகுந்தது. இதற்கு காரணம் கால்வாய்கள் முறையாக பராமரிக்கப்படாமல் மண் மூடி இருந்ததால் மழைநீர் செல்ல வழியின்றி குடியிருப்புகளுக்குள் புகுந்தது. தொடர்ந்து கால்வாய்கள் தூர்வாற நடவடிக்கை நகராட்சி நடவடிக்கை எடுத்தது. தற்பொது இப்பணிகள் பாதியில் நிற்கிறது. இதனால் மழை பெய்யும் போது மழைநீர் குடியிருப்புகளுக்குள் வர கூடிய சூழல் நிலவுகிறது. எனவே காய்வாய் தூர்வாரும்  பணிகளை மீண்டும் துவக்கி விரைந்து மேற்கொள்ள வேண்டும், என்றனர்.

Tags : Ooty Edins Road ,
× RELATED கோத்தகிரி பழங்குடியின கிராமத்தில்...