×

கொரோனா , பறவை காய்ச்சல் பீதிக்கு இடையே குமரியில் டெங்கு காய்ச்சலும் பரவுகிறது கொசு தொல்லை அதிகரிப்பு

நாகர்கோவில், ஜன.11:  குமரி மாவட்டத்தில் விட்டுவிட்டு பெய்து வரும் மழை காரணமாக கொரோனா, பறவை காய்ச்சல் பீதிக்கு இடையே டெங்கு காய்ச்சலும் பரவி வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குமரி மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வந்தாலும் ஒரு சில இடங்களில் நோய் தொற்று தொடர்ந்து பரவி வருகிறது. தினமும் 15 முதல் 25 பேர் வரை பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவ கல்லூரி, தக்கலையில் உள்ள அரசு மாவட்ட மருத்துவமனை ஆகிய இடங்களில் நோயாளிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலும் வேகமாக பரவி வருகிறது. மாவட்டத்தில் வழக்கத்திற்கு மாறாக ஜனவரி மாதத்தில் விட்டுவிட்டு சாரல் மழை பெய்து வருகிறது. மேலும் வெயிலின் தாக்கமும் குறைந்துள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக மிதமான வெப்பநிலை காணப்படுகிறது. இதன் காரணமாக வீடுகளின் சுற்றுப்புறங்களில் மழை தண்ணீர் தேங்கி அவற்றில் கொசுப்புழுக்கள் உற்பத்தியாகி கொசுத்தொல்லையும் அதிகரித்துள்ளது. இது டெங்கு காய்ச்சல் பரப்பும் ஏடிஎஸ் கொசுக்கள் உற்பத்தியாக காரணமாக அமைந்துவிடுகிறது. மாவட்டத்தில் ஆரல்வாய்மொழி, வில்லுக்குறி உள்ளிட்ட இடங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு காணப்படுகிறது. ஆரல்வாய்மொழியில் நேற்று முன்தினமும், வில்லுக்குறியில் கடந்த சில தினங்களுக்கு முன்னரும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்ட இருவர் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் ஊராட்சி, பேரூராட்சி பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடுகின்ற இடங்களில் டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்களை கட்டுப்படுத்த புகை மருந்து தெளிக்கும் பணிகளில் உள்ளாட்சி பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். வட்டத்தில் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு டெங்கு காய்ச்சல் பரவல் கட்டுக்குள் இருப்பதாக சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கொரோனா தொற்று குமரி மாவட்டத்தில் பரவியுள்ள நிலையில் கேரளாவையொட்டி இருப்பதால் பறவை காய்ச்சல் பீதியுடன் டெங்கு காய்ச்சலும் பரவி வருவது பொதுமக்களை கவலையடைய செய்துள்ளது. டெங்கு காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்த பொதுமக்கள் வீடுகளையும், சுற்றுப்புறங்களையும் தூய்மையாக வைத்திருப்பதுடன் கொசுப்புழுக்கள் உற்பத்தியாக ஏதுவாக தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். உடைந்த முட்டை தோடு, பேப்பர் கப், சிரட்டைகள், பழைய டயர், உடைந்த பாட்டில்கள் போன்றவற்றில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வீடுகளிலும், வெளியேயும் தேக்கி வைத்திருக்கும் தண்ணீரை மூடி பாதுகாக்க வேண்டும் என்று அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Tags : Kumari ,
× RELATED குமரியில் டாரஸ் லாரியால் தொடரும் விபத்து