×

சுசீந்திரத்தில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா நாளை தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது


சுசீந்திரம், ஜன.11: சுசீந்திரம் தாணுமாலயன்சுவாமி கோயிலில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா நாளை தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது. குமரி  மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயில் உட்பிரகாரத்தில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 18 அடி உயரம் கொண்ட   ஆஞ்சநேயர் சுவாமி சிலை உள்ளது. ஆண்டு தோறும் மார்கழி மாதம் மூல  நட்சத்திரத்தன்று ஆஞ்சநேயர் சுவாமிக்கு ஜெயந்தி விழா கொண்டாடப்படுவது  வழக்கம்.  இந்தாண்டு ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா நாளை(12ம் தேதி) தொடங்கி 2 நாட்கள் நடைபெறுகிறது. விழாவையொட்டி நாளை அதிகாலை 5 மணிக்கு  கணபதிஹோமம், 8 மணிக்கு நீலகண்ட விநாயகருக்கு அபிஷேகம், 10 மணிக்கு தாணுமாலயன்  சுவாமிக்கு அபிஷேகம், 11.30 மணிக்கு உச்சிகால தீபாராதனை, மாலை 6 மணிக்கு  கால பைரவருக்கு சிறப்பு தீபாராதனை நடக்கிறது.

நாளை மறுநாள் ஆஞ்சநேயர்  ஜெயந்தியன்று அதிகாலை 5 மணிக்கு ராம பிரானுக்கு அபிஷேகம், 8 மணிக்கு  ஆஞ்சநேயர் சுவாமிக்கு பால், தயிர், திருநீறு, குங்குமம், சந்தனம், களபம்,  நல்லெண்ணெய், தேன், பஞ்சாமிருதம், தயிர், இளநீர், எலுமிச்சை சாறு,  கரும்புசாறு  உள்பட 16 வகையாக பொருட்களால் சோடஷ அபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து  மதியம் 12 மணிக்கு ஆஞ்சநேயர் சுவாமிக்கு அலங்கார தீபாராதனை நடைபெறும்.  மாலை 6.30 மணிக்கு ராமருக்கு புஷ்பாபிஷேகம் நடைபெறும், அதன்பின் 7 மணிக்கு  ஆஞ்சநேயர் சுவாமிக்கு கழுத்து வரை புஷ்பாபிஷேம் நடைபெறும். பின்னர்  இரவு 10 மணிக்கு சுவாமிக்கு அலங்கார தீபாராதனை நடக்கிறது. இந்நிகழ்ச்சியில்  குமரி மாவட்டத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

பக்தர்களுக்கு லட்டு  வழங்க அனுமதி
முன்னதாக விழா நடத்துவது தொடர்பாக ஆர்டிஓ மயில் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது.  இதில் கோயில் நிர்வாகம் சார்பில் அதிகாரிகள், சுசீந்திரம் பேரூராட்சி  சுகாதார துறையினர், காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில்   கொரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு வழக்கம்போல் ஆஞ்சநேயர் ஜெயந்தி நடத்த அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் அன்னதானம் வழங்க மட்டும் தடை விதிக்கப்பட்டது. பார்சலில் பக்தர்களுக்கு லட்டு, தட்டுவடை, திருநீறு, குங்குமம் வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. விழா ஏற்பாடுகளை கோயில் கண்காணிப்பாளர்  ராமச்சந்திரன், மேலாளர் சண்முகம், தாணுமாலயன் சுவாமி பக்தர்கள், பொதுமக்கள்  இணைந்து செய்து வருகின்றனர்.

Tags : festival ,Anjaneyar Jayanti ,Suchindram ,
× RELATED மதுரை சித்திரைத் திருவிழா: போலீசாரின்...