×

பிசிசிஐ அறிவிப்பு; இந்தியா – இலங்கை மகளிர் 5 டி20 போட்டிகளில் மோதல்: டிச.21ல் முதல் போட்டி

புதுடெல்லி: இந்தியா – இலங்கை மகளிர் அணிகள் இடையிலான 5 டி20 போட்டிகள் நடக்கும் தேதி மற்றும் இடங்கள் பற்றிய அறிவிப்பை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இந்தியா – இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிகள் இடையில், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர், வரும் டிசம்பர் 21ம் தேதி முதல் டிச. 30ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இப்போட்டிகள், விசாகப்பட்டினம், திருவனந்தபுரம் ஆகிய நகரங்களில் நடைபெறும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிவித்துள்ளது. மகளிர் உலகக் கோப்பை போட்டிகளில் வென்று சாம்பியன் பட்டம் பெற்ற பின் இந்திய மகளிர் அணி கலந்து கொள்ளும் முதல் போட்டி இது. இந்த காலகட்டத்தில் வங்கதேச மகளிருடன் இந்திய மகளிர், போட்டிகளில் ஆட இருந்தனர்.

ஆனால், வங்கதேசத்தில் ஏற்பட்டுள்ள பிரச்னைகள் காரணமாக, அந்த போட்டி தள்ளி வைக்கப்பட்டது. கடந்த 2016ம் ஆண்டுக்கு பின், இலங்கை மகளிர் அணியினர் முதல் முறையாக இந்தியாவில் நடக்கும் ஒரு தொடரில் ஆடவுள்ளனர். இந்த தொடருக்கு பின், மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யுபிஎல்) போட்டிகள் நடைபெற உள்ளன. அதைத் தொடர்ந்து, வரும் 2026ல், பிப்ரவரி, மார்ச் மாதங்களில் பல வடிவ கிரிக்கெட் போட்டிகளில் இந்திய மகளிர் ஆடுவர்.

Tags : BCCI ,India ,Sri Lanka ,T20I ,New Delhi ,
× RELATED ஜூனியர் மகளிர் உலக ஹாக்கி; ஸ்பெயின்...