×

நிலம் கையகப்படுத்தப்பட்டு வருகிறது பரந்தூர் விமான நிலைய பணி விரைவில் தொடங்கப்படும்: டி.ஆர்.பாலு எம்பி தகவல்

சென்னை: சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள விமான நிலைய நிர்வாக அலுவலகத்தில், சென்னை விமான நிலைய அபிவிருத்தி குறித்த ஆய்வு கூட்டம் விமான நிலைய அட்வைஸரி கமிட்டி தலைவர் டி.ஆர்.பாலு எம்பி தலைமையில் நடந்தது. இதில் சென்னை விமான நிலைய இயக்குனர் ராஜா கிஷோர், எம்எல்ஏக்கள் எஸ்.ஆர்.ராஜா, இ.கருணாநிதி, சென்னை பெருநகர மாநகராட்சி, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் மாநில காவல் துறையின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பின்பு செய்தியாளர்களிடம் டி.ஆர். பாலு எம்பி கூறியதாவது: சென்னை விமான நிலையத்தில் சரக்கு போக்குவரத்தை மேம்படுத்துவதற்காக, புதிய சரக்கு முனையம் அமைக்க ஆலோசிக்கப்படுகிறது. அதற்கான இட வசதிகள் மேம்படுத்தவும் கட்டிடங்கள் கட்டவும் ஆய்வு திட்டப் பணிகள் விரைவில் தொடங்க இருக்கிறது. புதிதாக சரக்கு நிலையங்களை தோற்றுவிக்க வேண்டும் என்ற கருத்தை இந்திய விமான நிலைய ஆணையத்திற்கு தெரிவித்து இருக்கிறோம். பரந்தூர் விமான நிலையம் அமைக்க ஒன்றிய அரசு அனுமதி வழங்கி உள்ளது. பரந்தூர் விமான நிலையம் வந்தால், சென்னையில் வாகன நெரிசல் தவிர்க்கப்படும். பரந்தூர் விமான நிலையம் அமைக்க 5,700 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. அதில் 2,000 ஏக்கர் அரசுக்கு சொந்தமானது. 3,700 ஏக்கர் தனியாருக்கு சொந்தமானது, அதில் 1,300 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள நிலத்தை வாங்கக் கூடிய பணிகள் நடைபெற்று வருகிறது. மிக விரைவில் திட்டத்துக்கான நிலம் கையகப்படுத்தப்படும். அதற்கு பிறகு பணிகள் துவங்கப்படும். பல மாதங்களாக பரந்தூர் விவசாயிகளிடம் பேசி நேரம் கொடுத்து, அவர்களிடம் நிலம் கையகப்படுத்தப்படுகிறது. சென்னை சர்வதேச விமான நிலையத்தின் உள்பகுதியில், ப்ரீபெய்ட் டாக்ஸி புக்கிங் கவுன்டர் இல்லாததால் சர்வதேச பயணிகள் சிரமப்படுவதாக புகார்கள் வந்துள்ளன. எனவே விரைவில், சர்வதேச விமான நிலையத்தில் உள் பகுதியில், ப்ரீபெய்ட் டாக்ஸி புக்கிங் கவுன்டர் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இவ்வாறு டி.ஆர்.பாலு எம்பி கூறினார்.

Tags : Paranthur Airport ,D.R. Balu MP ,Chennai ,Chennai Airport ,Airport Administration Office ,Meenambakkam, Chennai ,Airport Advisory Committee ,Raja… ,
× RELATED பொள்ளாச்சி, ஆனைமலை சுற்றுவட்டார...