மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கார்த்திகை திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. டிச.3ம் தேதி கோயிலில் லட்சம் தீபம் ஏற்றும் வைபவம் நடைபெறும். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆண்டு முழுவதும் திருவிழா நடைபெற்று வருகிறது. இதன்படி இந்த மாதத்தில் கார்த்திகை திருவிழா இன்று காலை 9.35 மணியளவில் சுவாமி சன்னதியில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடைபெற்றன. இந்த உற்சவத்தை தொடர்ந்து 10 நாட்களும் மீனாட்சி-சுந்தரேசுவரர் பஞ்ச மூர்த்திகளுடன் காலை, மாலை வேளைகளில் ஆடி வீதி புறப்பாடாகி அருள்பாலிப்பர். டிச.3ம் தேதி மாலை திருக்கார்த்திகையன்று மாலை கோயில் முழுவதும் லட்சம் தீபங்கள் ஏற்றப்படும்.
அன்றைய தினம் மாலை 7 மணியளவில் மீனாட்சி- சுந்தரேசுவரர் பஞ்சமூர்த்திகளுடன் புறப்பாடாகி, கீழமாசி வீதி சென்று அம்மன் தேரடி அருகிலும், சுவாமி சன்னதி தேரடி அருகில் பூக்கடை தெருவிலும், சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சிக்கு எழுந்தருள்வர். மேற்படி, இரண்டு இடங்களில் சொக்கப்பனை ஏற்றப்படும். எனவே, உபய தங்கரதம், உபய திருக்கல்யாணம் மற்றும் உபய வைரக்கீரிடம் ஆகிய விசேடங்கள் எதுவும் நடைபெறாது என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
