×

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு செய்துங்கநல்லூரில் இரு நாட்கள் சிறப்பு சந்தை

செய்துங்கநல்லூர், ஜன. 11:  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு செய்துங்கநல்லூரில்  12, 13 ஆகிய தேதிகளில் சிறப்பு சந்தை நடக்கிறது. செய்துங்கநல்லூரில் புதன்கிழமை தோறும் நடந்து வந்த வாரச்சந்தையில் கடந்த  ஆண்டு மக்கள் கூட்டம் அதிகரித்தது. இதையடுத்து நெல்லை - திருச்செந்தூர் சாலையின் இருபுறத்தையும் ஆக்கிரமித்து கடைகள் வைக்கப்பட்டதால் போக்குவரத்து நெரிசல் உருவானது. இதனிடையே சந்தையை மேம்படுத்தும் பணி துவங்கியதால் அனைத்து வியாபாரிகளும் சாலைக்கு வந்தனர். இதனால் போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகமானது. பின்னர் கொரோனா ஊரடங்கால் கடந்த ஆண்டு மார்ச், ஏப்ரலில் சந்தை இயங்கவில்லை. இருப்பினும் சந்தையை மேம்படுத்தும் பணி தொய்வின்றி நடந்தது.

கொரோனா ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வந்ததால் சந்தை மீண்டும் துவங்கியது.  ஆனால், சந்தைக்குள் நடந்துவந்த மேம்பாட்டு பணியால் மெயின் ரோட்டிலேயே வியாபாரம் செய்ய வேண்டிய நிலை உருவானது. இதனைத் தொடர்ந்து செய்துங்கநல்லூர் இன்ஸ்பெக்டர் ராஜசுந்தர் ஏற்பாட்டில் சந்தையில் ஆய்வு நடத்தி ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் கருங்குளம் ஒன்றிய சேர்மன் கோமதி ராஜேந்திரன், செய்துங்கநல்லூர் பஞ்சாயத்து தலைவர் பார்வதி நாதன், கருங்குளம் ஒன்றிய ஆணையாளர் செல்வி, கூடுதல் ஆணையாளர் பாக்கிய லீலா, பொறியாளர் சித்திரை, விவசாயிகள் சங்கத் தலைவர் குமார், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு உள்ளிட்ட பங்கேற்று ஆலாசனை வழங்கினர். கூட்டத்தில் ஜனவரி 6ம்தேதி முதல் சந்தையை பழைய இடத்துக்குள் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது.

இதையொட்டி மீன், கருவாடு வியாபாரிகள், காய்கறி வியாபாரிகள், பழ வியாபாரிகள், இனிப்பு பண்ட வியாபாரிகள் உள்ளிட்டோருக்கு தனித்தனியாக இடம் ஒதுக்கி அவர்களை சந்தைக்குள் கொண்டுவர ஏற்பாடு செய்யப்பட்டது.  எனவே, அடுத்த வாரம் முதல் மெயின்ரோட்டில் யாரும் கடை வைக்க கூடாது. மீறி யாராவது கடை வைத்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் தீர்மானிக்கப்பட்டதோடு சந்தை ஏலமிடப்பட்டது.  இதில் சந்தையானது ரூ. 16. 29 லட்சத்துக்கு ஏலம்போனது. இதையடுத்து நாளைக்குள் (12ம்தேதிக்குள்) சந்தைக்குள் அனைத்து கடைகளையும் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. பொங்கலை முன்னிட்டு செய்துங்கநல்லூரில் நாளையும், நாளை மறுதினமும் சிறப்பு சந்தை நடைபெற உள்ளதாக ஒப்பந்தக்காரர்கள் தெரிவித்தனர்.

Tags : festival ,Pongal ,
× RELATED அழகு நாச்சியம்மன் கோயில் பொங்கல் விழா