×

நெல்லை மாவட்டத்தில் வெளுத்து வாங்கிய மழை தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

வி.கே.புரம், ஜன.11: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்தது. தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடியதால், தாழ்வான பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேற கேட்டு கொள்ளப்பட்டனர். வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக வானம் மேகமூட்டமாக இருப்பதுடன், விட்டு விட்டு லேசானது முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களிலும் இருதினங்களுக்கு பலத்த மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. அதன்படியே நேற்று அதிகாலை ஓரளவுக்கு அனைத்து பகுதிகளிலும் மழை பரவலாக காணப்பட்டது.

தொடர்ந்து நேற்று பிற்பகல் தொடங்கிய மழை, மாலை வரை நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தொடர்ந்து பெய்தது. நெல்லை மாநகரில் இரண்டு மணி நேரம் விடாமல் மழை பொழிந்தது. இதன் காரணமாக சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. நெல்லை பஸ் நிலையங்கள், வீதிகள் அனைத்தும் மழைநீரால் சகதிகாடாக காட்சியளித்தன. நெல்லை சுற்றுவட்டார பகுதிகளிலும் நேற்று கனமழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர் மழைபொழிவு காரணமாக ஏற்கனவே பாபநாசம், மணிமுத்தாறு அணைகள் நிரம்பி விட்ட நிலையில் உபரி நீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பாபநாசம் அணையின் நீர்மட்டம் தற்போது 142 அடியாக பராமரிக்கப்படுகிறது. அணைக்கு வினாடிக்கு 1759.92 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையிலிருந்து 2451.12 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 141.04 அடியாக உள்ளது.

மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 117.50 அடியாக பராமரிக்கப்படுகிறது. அணைக்கு வினாடிக்கு 1491 கனஅடி நீர் வருகிறது. அணையிலிருந்து பெருங்கால்வாய்க்கு 10 கனஅடி தண்ணீரும், பிரதான கால்வாய்க்கு 445 கனஅடி தண்ணீரும், ஆற்றங்காலுக்கு 909 கனஅடி தண்ணீரும் மொத்தம் 1364 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுள்ளது. வடக்கு பச்சையாறில் 31 அடியும், நம்பியாறு அணையில் 10.62 அடியும், கொடுமுடியாற்றில் 27 அடியும் நீர்மட்டம் உள்ளது. பாபநாசம் அணையில் இருந்து 2451 கன அடி தண்ணீரும், மணிமுத்தாறு அணையில் இருந்து 1364 கன அடியும் திறந்துவிடப்பட்டுள்ளதால் தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

நெல்லை குறுக்குத்துறை முருகன் கோயிலை தண்ணீர் சூழ்ந்துள்ளது. பாதுகாப்பு கருதி கோயில் நடை சாத்தப்பட்டுள்ளது. ஆற்றின் இரு கரையோரங்களிலும் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால், கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆற்றில் துணி துவைப்பது, குளிப்பது போன்றவற்றிற்கு போலீசார் நேற்று தடை விதித்தனர். நெல்லை மாவட்டத்தில் நேற்று காலை 7 மணி நிலவரப்படி பெய்த மழை அளவு விவரம்: பாபநாசம்- 29 மிமீ, சேர்வலாறு-15, மணிமுத்தாறு- 41.8, பாளை-25, கன்னடியான்-42, சேரன்மகாதேவி-22, மூலக்கரைப்பட்டி-15, அம்பை-32, ராதாபுரம்-9.6, நாங்குநேரி-7.5, களக்காடு-14 மிமீ, நெல்லை-16 மிமீ.

தென்காசி மாவட்டத்திலும் நேற்று செங்கோட்டை, சிவகிரி பகுதிகளில் நல்ல மழை காணப்பட்டது. நேற்றைய காலை நேரநிலவரப்படி மழை அளவு விபரம்: தென்காசி 16.50 மிமீ, சிவகிரி 12, செங்கோட்டை 4, ஆய்குடி 21.20, கடனா 20, ராமநதி 18, கருப்பா நதி 8 மிமீ மழை பெய்திருந்தது. நேற்று மாலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்திலும் நேற்று நல்ல மழை காணப்பட்டது. 3 மாவட்டங்களிலும் மழை தொடர்ந்து நீடித்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக பொங்கல் பண்டிகையை ஒட்டியும் வீடுகளுக்குள் முடங்கி கிடக்க வேண்டிய நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

செல்பி எடுக்க வேண்டாம் கலெக்டர் எச்சரிக்கை
தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக பொதுமக்கள் போட்டோ மற்றும் செல்பி எடுக்க ஆற்றங்கரைக்கு செல்ல வேண்டாம் என கலெக்டர் விஷ்ணு கேட்டுக்கொண்டார். நெல்லை மாவட்டத்திலுள்ள பிரதான அணைகளான பாபநாசம் மற்றும் மணிமுத்தாறு அணைகள் நிரம்பிய நிலையில் உபரி நீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்படுகிறது. இதனால் ஆற்றில் நீர் வரத்து அதிக அளவில் உள்ளதால் பாதுகாப்பு நிமித்தம் காரணமாக பொதுமக்கள் ஆற்றில் குளிக்க செல்ல வேண்டாம். ஆற்றங்கரையில் போட்டோ மற்றும் செல்பி எடுக்க யாரும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர். மேலும் ஆற்றங்கரையை ஓட்டி தாழ்வான பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கவனத்துடன் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இதனை நெல்லை கலெக்டர் விஷ்ணு தெரிவித்தார்.

Tags : district ,river ,Nellai ,
× RELATED தமிழ்நாட்டில் அதிகபட்சமாக நெல்லை...