×

நெல்லையில் களைகட்டிய பொங்கல் விற்பனை தேனி, மதுரையிலிருந்து கரும்புகள் குவிந்தன

நெல்லை, ஜன. 11: ெபாங்கல் பண்டிகைக்காக தேனி, மதுரை மாவட்டங்களில் இருந்து கரும்புகள் லாரிகளில் விற்பனைக்கு வந்து குவிந்துள்ளன. இதனால் விற்பனை களை கட்டத்தொடங்கியுள்ளது. தைபொங்கல் திருவிழா வருகிற 14ம் தேதி வியாழன்று கொண்டாடப்படஉள்ளது. இந்த ஆண்டு நல்ல மழை பெய்ததால் காய்கனி மற்றும் பொங்கல் பொருட்கள் விளைச்சல் ஓரளவு அமோகமாக உள்ளது. பொங்கலுக்கு 2 நாட்களே உள்ள நிலையில் வெளிமாவட்டங்களில் இருந்து கரும்பு கட்டுகள் நெல்லைக்கு நேற்று அதிக அளவில் வந்து இறங்கின. குறிப்பாக கரும்புக்கு புகழ்பெற்ற தேனி பகுதியில் இருந்து லாரிகளில் வந்த கரும்பு கட்டுகள் நெல்லை டவுன் ரதவீதிகள், சந்திப்பு பகுதி மற்றும் பாளை சீவலப்பேரி ரோடு போன்ற பகுதிகளில் தற்காலிக கடைகள் அமைத்து விற்பனையை தொடங்கியுள்ளனர். பாளை மார்க்கெட் பகுதியில் உள்ள மைதானத்தில் அனுமதி இல்லை என்பதால் அதன் அருகே உள்ள சாலைகளில் கடைகள் தோன்றி வருகின்றன.

கரும்பு கட்டுகள் 10 எண்ணம் மற்றும் 15 எண்ணம் கொண்ட கட்டுகளாக உள்ளன. அவற்றின் விளைச்சல் தரத்திற்கு ஏற்ப ஒரு கட்டு ரூ.350 முதல் ரூ,400 மற்றும் ரூ.450 என்ற விலைகளில் விற்பனையாகின்றன. தலைப்பொங்கல் கொண்டாடும் தம்பதிகளுக்கு பொங்கல்படி வழங்குவதற்காக ஏராளமானோர் நேற்று கரும்புகட்டுகளை வாங்கி வாகனங்களில் ஏற்றி கொண்டு சென்றனர். உள் மாவட்ட அளவில் விளைந்த கரும்புகளும் விற்பனைக்கு வரத்தொடங்கியுள்ளன. ஏற்றுக்கூலி இறக்குக்கூலி, கடை தரைவாடகை, வாகன செலவு என அதிகம் செலவாவதால் விலை கட்டுப்படியாவதில்லை. இதனால் கடந்த ஆண்டைவிட 10 சதவீதம் அளவிற்கு கூடுதல் விலைக்கு விற்றால்தான் லாபம் கிடைக்கும். ஆனால் கொரோனாவில் இருந்து மக்கள் இப்போதுதான் மீண்டுவருவதால் விற்பனை எப்படி இருக்கும் எனத்தெரியவில்லை. இதனிடையே எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு பொங்கல் நெருங்கிவரும் நேரத்தில் கனமழை பெய்வதாலும் விற்பனை பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர். புதியதாக கரும்பு, மஞ்சள் பனங்கிழங்கு, பனை ஓலை, காய்கறி போன்ற கடைகள் தோன்றியுள்ளதால் முக்கிய சாலைகளில் ெநரிசல் அதிகரித்துள்ளன.

Tags : Nellai Sugarcane ,Madurai ,Theni ,
× RELATED தேர்தல் விதிமீறல் குறித்து புகார் தெரிவிக்கலாம்