×

பீகார் தேர்தலில் படுதோல்வி எதிரொலி; காங்கிரஸ் கட்சியை சீரமைக்க புதிய திட்டம்: விரைவில் அதிரடி நடவடிக்கை பாய்கிறது

புதுடெல்லி: பீகார் சட்டசபை தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து, கட்சியை பலப்படுத்த எதிர்கால செயல்திட்டத்தை காங்கிரஸ் மேலிடம் வகுத்து வருகிறது. பீகார் மாநில சட்டசபைக்கு சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 61 தொகுதிகளில் போட்டியிட்டு வெறும் 6 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்த படுதோல்வி குறித்து ஆராய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் டெல்லியில் மிக முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மாநிலத் தலைவர்கள் தனித்தனியாக அழைக்கப்பட்டு தோல்விக்கான காரணங்கள் மற்றும் கள நிலவரம் குறித்து விரிவாகக் கேட்டறியப்பட்டது.

அப்போது வேட்பாளர் தேர்வு சரியாக நடைபெறவில்லை என்றும், அடிமட்ட அளவில் கட்சி அமைப்பு பலவீனமாக இருப்பதாகவும் நிர்வாகிகள் அடுக்கடுக்கான புகார்களைத் தெரிவித்தனர். இந்தக் கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் தாரிக் அன்வர், ‘பீகார் மாநில நிர்வாகிகள் அளித்த ஆலோசனைகளின் அடிப்படையில் கட்சியைச் சீரமைக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதற்கான எதிர்கால செயல்திட்டத்தை கட்சித் தலைமை விரைவில் உருவாக்கும்’ என்று தெரிவித்தார்.

மேலும், ஆளுங்கட்சியினர் வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்ததும், வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடந்ததும் தோல்விக்கு முக்கியக் காரணம் என்று கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் பீகார் மாநில காங்கிரஸ் நிர்வாகத்தில் விரைவில் பெரிய மாற்றங்கள் இருக்கும் என்றும், கூட்டணி தொடர்பான முடிவுகள் மறுபரிசீலனை செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Bihar elections ,Congress party ,New Delhi ,Bihar Assembly ,Congress ,Bihar State Assembly ,
× RELATED கேரள உள்ளாட்சி தேர்தலில் பாஜ தனது...