×

18 மாவட்டங்களில் காலியிடம் நிரப்ப நடவடிக்கை ஆதிதிராவிடர் பள்ளிகள் தலைமை ஆசிரியர் பணிக்கு கலந்தாய்வு

நெல்லை, ஜன.11: தமிழகத்தில் நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 18 இடங்களில் இயங்கும் ஆதி திராவிடர் நல தொடக்கப்பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்புவதற்கான கலந்தாய்வு நாளை நடக்கிறது. இதுகுறித்து ஆதி திராவிடர் நல ஆணையர் முனியநாதன் 18 மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்களுக்கு விடுத்துள்ள உத்தரவு: தமிழகத்தில் அரியலூர், சென்னை, கடலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், நாமக்கல், நீலகிரி, பெரம்பலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், திருநெல்வேலி, திருவண்ணாமலை, திருவாரூர், தூத்துக்குடி, வேலூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இயங்கும் ஆதி திராவிடர் நல தொடக்கப்பள்ளிகளில் 2020-21ம் கல்வியாண்டில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதற்காக 1.3.2020ல் நிலையான இறுதி தேர்ந்தோர் பட்டியலில் தகுதி உடைய இடைநிலை ஆசிரியர்கள், காப்பாளர்களை, தலைமை ஆசிரியர் பணியிடங்களில் நிரப்புவதற்காக வருகிற 12ம் தேதி (நாளை) சென்னை, எம்சி ராஜா கல்லூரி மாணவர் விடுதிக்கு நேரில் அழைத்து வர வேண்டும். சம்பந்தப்பட்ட ஆதி திராவிடர் நல அலுவலர், கண்காணிப்பாளர்கள் உரிய கோப்புகளுடன் நேரில் ஆஜராக வேண்டும். தகுதி பெற்ற ஆசிரியர்கள், பதவி உயர்வு துறப்பு ஏதேனும் செய்துள்ளாரா? அவ்வாறு இருந்தால் அதற்கு அடுத்த நிலையில் நபரை அழைத்து வர வேண்டும். கலந்தாய்வுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக வந்து விட வேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட ஒருவர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். கலந்தாய்வுக்கு வரும் ஆசிரியர்கள் கட்டாயம் முக கவசம் அணிந்து அடையாள அட்டை அணிந்து வர வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்றி இருக்கையில் அமர வேண்டும். காய்ச்சல், உடல்நிலைக் குறைவு உடைய நபர்கள் தனி அறையில் மட்டும் அமர வேண்டும்.

Tags : districts ,schools ,Adithravidar ,
× RELATED சிறுத்தை நடமாட்டத்தால் அரியலூர்...