மும்பை: கர்நாடகாவில் முதல்வர் மாற்றம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும், அப்பதவிக்கு வர தான் அவசரப்படவில்லை என்றும் துணை முதல்வர் டி.கே. சிவகுமார் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்து இரண்டரை ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில், முதல்வர் சித்தராமையா மாற்றப்பட்டு துணை முதல்வராக உள்ள டி.கே. சிவகுமாருக்கு அப்பதவி வழங்கப்படலாம் என்ற தகவல் கடந்த சில நாட்களாகவே பலமாக உலா வருகிறது. இது தொடர்பாக டெல்லியில் ரகசிய பேச்சுவார்த்தைகள் நடப்பதாகவும், கட்சியில் கோஷ்டி பூசல் இருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வந்தன.
இந்தச் சூழலில் மும்பையில் செய்தியாளர்களைச் சந்தித்த டி.கே.சிவகுமார், ‘கர்நாடகாவில் முதல்வர் மாற்றம் குறித்து ராகுல் காந்தியையோ அல்லது மல்லிகார்ஜுன கார்கேவையோ நான் சந்திக்கவில்லை. முதல்வர் பதவியை அடைவதற்கு நான் அவசரப்படவில்லை. சித்தராமையா தான் முதல்வராக நீடிக்கிறார், நாங்கள் அனைவரும் அவருடன் இணைந்து ஒற்றுமையாகவே செயல்பட்டு வருகிறோம்’ என்று வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். மேலும் தொடர்ந்து பேசிய அவர், ‘காங்கிரசில் கோஷ்டி பூசல் எதுவும் இல்லை. இங்கே ஒரே ஒரு அணிதான் உள்ளது; அது காங்கிரஸ் அணி மட்டுமே. தலைமை என்ன முடிவு எடுக்கிறதோ அதற்கு நாங்கள் கட்டுப்படுவோம்.
டெல்லிக்கு அழைத்தால் நிச்சயம் செல்வோம்’ என்று தெரிவித்தார். இதனிடையே, கர்நாடக தலைமை மாற்றம் குறித்து சம்பந்தப்பட்ட அனைவரிடமும் ஆலோசித்த பிறகே முடிவு எடுக்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் விளக்கம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
