மத்திய கல்வி நிறுவனங்களில் பயில்வோர் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க அழைப்பு

திருச்சி, ஜன.11: திருச்சி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பட்டியலிடப்பட்ட மத்திய அரசு கல்வி நிறுவனங்களை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மாணவ, மாணவிகளுக்கு 2020-2021ம் ஆண்டிற்கான கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள இக்கல்வி நிறுவனங்களில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பயிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மாணவ, மாணவியர்களில் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு மிகாமல் உள்ளவர்களுக்கு கல்வி உதவித்தொகையாக ஒருவருக்கு ஆண்டிற்கு ரூ.2 லட்சம் வரை முதற்கட்டமாக 100 பேருக்கு 2019-2020ம் கல்வி ஆண்டு முதல் கல்வி உதவித் தொகை வழங்குவதற்கு தமிழக அரசால் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கல்வி உதவித்தொகைக்கு 2020-2021ம் கல்வி ஆண்டிற்கான விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான மாணவர்கள் ‘இயக்குனர், பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம், எழிலகம் இணைப்பு கட்டடம், 2-வது தளம், சேப்பாக்கம், சென்னை-5’ தொலைபேசி எண். 044-28551462’ என்ற (மின்னஞ்சல்: tngovtiitscholarship@gmail.com , mailto:tngovtiitscholarship@gmail.com  முகவரியிலோ அல்லது திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் தங்களது சான்றொப்பத்துடன் தகுதியான விண்ணப்பத்தினை பரிந்துரை செய்து விண்ணப்பங்களை இயக்குனரகத்துக்கு பிப்.15ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என திருச்சி கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.

Related Stories:

>