ஆஸ்திரேலியா, இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டிக்கான தனது 14 வீரர்கள் கொண்ட அணியில் எந்த மாற்றமும் செய்யாமல் அதே அணியைத் தக்கவைத்துள்ளது ஆஸ்திரேலிய அணி. கேப்டன் பேட் கம்மின்ஸ் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர் காயம் காரணமாக தொடர்ந்து இரண்டாவது போட்டியிலும் விலகியுள்ளனர்.
முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா எட்டு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பேட் கம்மின்ஸ் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக அந்தப் போட்டியில் விளையாடவில்லை. இந்நிலையில், டிசம்பர் 4ஆம் தேதி காபாவில் தொடங்கவிருக்கும் பகல்-இரவு டெஸ்ட் போட்டிக்கு கம்மின்ஸ் திரும்புவதற்கு இன்னும் உடற்தகுதி அனுமதி கிடைக்கவில்லை.
அவர் பிரிஸ்பேனுக்குப் பயணித்து தனது பயிற்சிகளைத் தொடருவார், இருந்தபோதிலும் ஆனால் தேர்வாளர்கள் அவரை அவசரப்படுத்த வேண்டாம் என்று முடிவெடுத்துள்ளனர். அதேபோல, மற்றொரு முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜோஷ் ஹேசில்வுட்டும் தொடையில் ஏற்பட்ட காயத்திலிருந்து இன்னும் முழுமையாக மீளவில்லை என்பதால், அவரும் அணியில் இடம்பெறவில்லை.
முன்னணி வேகப்பந்து வீச்சாளர்கள் இல்லாத நிலையில், அறிமுகப் போட்டியில் சிறப்பாகச் செயல்பட்ட மாற்று வேகப்பந்து வீச்சாளர் பிரெண்டன் டோகெட்டுக்கு காபா டெஸ்ட்டிலும் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அனுபவம் வாய்ந்த தொடக்க ஆட்டக்காரரான உஸ்மான் கவாஜா, முதல் டெஸ்ட்டில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தாலும் அணியில் தனது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார். எனினும், முதல் டெஸ்ட்டின்போது அவருக்கு ஏற்பட்ட முதுகுப் பிடிப்பு காரணமாக அவர் தனது உடற்தகுதியை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். ஒருவேளை கவாஜா உடற்தகுதி பெறவில்லை என்றால், ஆல்ரவுண்டர் பியூ வெப்ஸ்டர் அல்லது மாற்று பேட்ஸ்மேனாக ஜோஷ் இங்கிலிஸ் ஆகியோர் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது.
இரண்டாவது டெஸ்ட்டுக்கான ஆஸ்திரேலிய அணி:
ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, பிரெண்டன் டோகெட், கேமரூன் கிரீன், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஷேன், நாதன் லியான், மைக்கேல் நெசர், மிட்செல் ஸ்டார்க், ஜேக் வெதரால்ட், பியூ வெப்ஸ்டர்.
