திருவாரூர் மாவட்டத்தில் 7,733 கட்டுமான தொழிலாளர்கள், ஓய்வூதியர்களுக்கு பொங்கல் பரிசு

திருவாரூர், ஜன.11: திருவாரூர் மாவட்டத்தில் கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் என மொத்தம் 7 ஆயிரத்து 733 பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவதாக கலெக்டர் சாந்தா தெரிவித்துள்ளார். கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் ஆகியோருக்கு அரசு அறிவித்தவாறு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நேற்று திருவாரூரில் கலெக்டர் சாந்தா தலைமையில் நடைபெற்றது. இதில் தொழிலாளர்களுக்கு பரிசு தொகுப்புகளை வழங்கி கலெக்டர் பேசுகையில், கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அரசு சார்பில் பச்சை அரிசி 2 கிலோ, பாசிபருப்பு ஒரு கிலோ, சமையல் எண்ணெய் அரை லிட்டர், வெல்லம் ஒரு கிலோ, நெய் 100 கிராம், முந்திரி மற்றும் திராட்சை தலா 25 கிராம், ஏலக்காய் 5 கிராம் மற்றும் ஆண் தொழிலாளர்களுக்கு வேட்டியும், பெண் தொழிலாளர்களுக்கு புடவை ஆகியவை பொங்கல் பரிசு தொகுப்பாக வழங்குவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனையொட்டி இன்று முதல் கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் நிலையில் மாவட்டம் முழுவதும் பதிவுபற்ற கட்டுமான தொழிலாளர்கள் 6 ஆயிரத்து 903 பேர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் 830 பேர் என மொத்தம் 7 ஆயிரத்து 733 பேருக்கு ரூ 57 லட்சத்து 24 ஆயிரத்து 750 மதிப்பில் இந்த பொங்கல்பரிசு தொகுப்பானது வழங்கப்படுகிறது. இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார். நிகழ்ச்சியில் ஆர்டிஓ பாலச்சந்திரன், தாசில்தார் நக்கீரன், தொழிலாளர் நலத்துறை அலுவலக கண்காணிப்பாளர் பழனிவேல், உதவி கண்காணிப்பாளர் ராஜேஸ்வரி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Related Stories:

>