×

தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் நகரில் 10 ஆண்டுகளாக சாலை வசதிக்காக போராடும் மக்கள்

தஞ்சை,ஜன.11: தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் நகரில் கடந்த 10 ஆண்டுகளாக சாலை வசதிக்காக மக்கள் போராடி வருகின்றனர். சாலை வசதி அமைக்காவிட்டால் குடும்ப அட்டையை திரும்ப ஒப்படைக்க முடிவு செய்துள்ளனர். தஞ்சையை அடுத்த மேலவெளி ஊராட்சி வார்டு எண் 11,12, ஆபிரகாம் பண்டிதர் நகர் பகுதிகளில் சுமார் நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்களில் சுமார் 1500 மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் சாலை வசதி இல்லாமல் அந்த பகுதி மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். அவசர உதவிக்கு இந்த பகுதியில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூட உள்ளே வர முடியாமல் சிக்கித் தவிக்கின்றனர். எனவே இந்த பகுதிக்கு தார் சாலை அமைத்து கொடுக்க வேண்டும் என பல்வேறு அதிகாரிகளிடம் மனுக்கள் கொடுத்து இதுவரை எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை.

தற்போது பலத்த மழை பெய்து வருவதால், சாலை முழுவதும் மழை நீர் தேங்கி, பொது மக்கள் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. பலநாட்களாக அப்பகுதியில் தேங்கியுள்ள கழிவுகளால் கொசுக்களின் தொல்லை அதிகரித்துள்ளது. இதனால் அப்பகுதியிலுள்ளவர்களுக்கு பல்வேறு நோய்கள் வருவதற்கும் வாய்ப்புள்ளது. மாவட்ட நிர்வாகத்திடம் புகாரளித்தும் எந்த விதமான பலனும் இல்லாத நிலையில், அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள், நேற்று தங்கள் பகுதியில் தார்சாலை அமைத்து தந்தால் மட்டுமே வரும் சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்கப் போவதாகவும், இல்லை என்றால் எங்களது குடும்ப அட்டை மற்றும் வாக்காளர் அட்டையை உள்ளிட்ட அரசு ஆவணங்களை திரும்ப செலுத்துவோம் என நோட்டீஸ் அச்சடித்து, பேண்ட் இசைக்கருவிகள் மூலம் ஒலி எழுப்பி வீடு வீடாக துண்டு பிரசுரங்களை வழங்கி நுாதன முறையில் அறிவிப்பு செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags : road facilities ,Abraham Pandit Nagar ,Tanjore ,
× RELATED ஆம்புலன்சுக்கும் வழிவிட மறுத்ததால்...