களைகட்டிய தஞ்சை மாவட்டம்

தஞ்சை,ஜன.11: தஞ்சை மாவட்டத்தில் தலை பொங்கலுக்கு மகள் வீட்டு சீர் கொண்டு செல்லும் பெற்றோர்களால் கடைவீதி களைகட்டியுள்ளது. தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை நாடு முழுவதும் வரும் 14 ம்தேதி கொண்டாடப்படுகிறது. வரும் 13ம் தேதி போகிப்பண்டிகையும், 15ம் தேதி திருவள்ளுவர் தினம் மற்றும் கன்னிப்பொங்கலும், 16ம் தேதி உழவர் திருநாளாக கொண்டாப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு வீடுகளை சுத்தம் செய்து வர்ணம் பூசி, அழகுப்படுத்துவார்கள். பின்னர், வீட்டின் பின்புறம் புதியதாக மண்ணாலான அடுப்பு செய்வார்கள். தொடர்ந்து கரும்பு, வாழைதார், இஞ்சி மற்றும் மஞ்சள் கொத்து, காய்கறிகள், பானை உள்ளிட்டவைகள் வாங்கி வந்து பூஜையலறையில் வைப்பார்கள். பொங்கலன்று, அவைகளை எடுத்து பொங்கலிட்டு பொங்கலோ பொங்கலோ என்று கோஷமிட்டு, சூரிய பகவானை வணங்கி குடும்பத்துடன் கொண்டாடுவார்கள்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த பொங்கல் திருநாளை முன்னிட்டு, பெற்றோர்கள், பொங்கல் திருநாளுக்கு இன்னமும் 5 நாட்களே உள்ள நிலையில், திருமணம் செய்து வைத்த தங்களது மகளுக்கு பொங்கல் சீர் வரிசை எடுத்து செல்கின்றனர். பசும்பால், கரும்பு, வாழைபழத்தார், இஞ்சி, மஞ்சள் கொத்து, மொச்சை, பீன்ஸ், பூசணிக்காய், வாழைக்காய், தேங்காய் உள்ளிட்ட 21 வகையான காய்கறிகள் மற்றும் புத்தாடைகள், வசதிக்கு தகுந்தாற் போல், மண்பானை, வெண்கலப்பானை, பித்தளை பானைகளை எடுத்து கொண்டு, உற்றார் உறவினர்களை, வாகனத்தில் அழைத்து கொண்டு, மாப்பிள்ளை வீட்டிற்கு செல்கின்றனர்.

அங்கு அவர்களை உபசரித்து, விருந்தளித்து, சீரினை மாப்பிளை வீட்டார் பெற்று கொள்கின்றனர். இதனால், கரும்பு உள்ளிட்ட அனைத்து பொருட்களும் விற்பனை ஜரூராக நடைபெறுகிறது. இத்தகைய பொருட்களை அனைவரும் கட்டாய வாங்க வேண்டியிருப்பதால், பெற்றோர்கள், கடன் அல்லது வட்டிக்கு வாங்கியாவது, மகளுக்கு சீர் செய்து வருகின்றனர். பொங்கல் திருநாளுக்கு இன்னமும் 5 நாட்களே உள்ள நிலையில், காய்கறியின் விலை உயர்ந்துள்ளது. ஒவ்வொரு காய்கறிக்கும் சுமார் ரூ. 5 முதல் ரூ. 10 வரை விலை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>