வீடுகளுக்குள் மழைநீர் புகாமல் தடுக்க கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம்

அறந்தாங்கி, ஜன.11: மணமேல்குடி அருகே வீடுகளுக்குள் மழைநீர் புகுவதை தடுக்கக்கோரி பொதுமக்கள் கிழக்கு கடற்கரை சாலை மறியலில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மணமேல்குடியை அடுத்த கோட்டைப்பட்டினம் ஊராட்சி இரளிவயல் பகுதியில் சுமார் 100க்கும் அதிகமான வீடுகள் உள்ளன. இந்த பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையின் காரணமாக மழைநீர் வீடுகளை சூழ்ந்தது. மேலும் நேற்று முன்தினம் வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்தது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் இரளிவயல் பகுதியில் புகுந்துள்ள மழைநீர் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கக் கோரியும், அப்பகுதியில் மழைநீர் தேங்காமலும், வீடுகளுக்குள் மழைநீர் புகாமலும் நடவடிக்கை எடுக்கக் கோரியும், இரளிவயலுக்கு சாலை வசதி செய்து தரக்கோரியும் அப்பகுதி மக்கள் கிழக்கு கடற்கரை சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலில ஈடுபட்டவர்களுடன் கோட்டைப்பட்டினம் டிஎஸ்பி சிவராமன், இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சாமுவேல்ஞானம், கோட்டைப்பட்டினம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அக்பர்அலி மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர். சாலை மறியல் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories:

>