- இலங்கை
- வங்காள விரிகுடா
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- புதுச்சேரி
- ஆந்திரப் பிரதேசம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சென்னை
- சூறாவளி
- 30வது
* புதுவை- ஆந்திரா இடையே 30ம் தேதி கரையை கடக்கிறது
* தமிழ்நாட்டிற்கு அதிகனமழை எச்சரிக்கை
சென்னை: வங்கக் கடலில் இலங்கை அருகே டிட்வா புயல் உருவானது. இது, புதுவை-ஆந்திரா இடையே வரும் 30ம் தேதி கரையை கடக்கிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டிற்கு அதிகன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிகாரிகளுடன் நேற்று அவசர ஆலோசனை நடத்தினார். இலங்கையையொட்டி இந்திய பெருங்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இதனால் இலங்கையில் கனமழை கொட்டி வருகிறது. அங்கு பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இந்த நிலையில், காற்றழுத்த தாழ்வு பகுதி,ேநற்றுமுன்தினம் இரவு காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், காலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், பின்னர் புயல் சின்னமாகவும் மாறி உள்ளது.
இந்த புயலுக்கு டிட்வா என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் அமுதா கூறியதாவது: தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு இலங்கை – இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுப்பெற்று அதே பகுதிகளில் இலங்கை அம்பாந்தோட்டையிலிருந்து கிழக்கு-வடகிழக்கே சுமார் 130 கிலோ மீட்டர் தொலைவிலும், இலங்கை மட்டக்கிளப்பிலிருந்து தெற்கு-தென்கிழக்கே 120 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுவையிலிருந்து தெற்கு-தென்கிழக்கே 640 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து தெற்கு-தென்கிழக்கே 730 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டது.
இது, மேலும் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நேற்று பகல் 11.30 மணி அளவில் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளில் புயலாக வலுப்பெற்றது. இதற்கு டிட்வா என்று பெயரிடப்பட்டுள்ளது. அந்த புயல் மேலும் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வடதமிழகம் புதுவை மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. இது 30ம் தேதி அதிகாலையில் புதுச்சேரி- தெற்கு ஆந்திரா இடையே கரையைக் கடக்கும்.
வங்கக் கடல் பகுதியல் டிட்வா புயல் மையம் கொண்டதை அடுத்து தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை நேற்று பெய்தது. கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், பலத்த தரை காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசியது. மேலும், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்தது.
அதன் ெதாடர்ச்சியாக தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை இன்றும் பெய்யும் வாய்ப்புள்ளது. மேலும், இன்றைய நிலவரப்படி கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், பலத்த தரை காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும். நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யும். அதனால் அந்த பகுதிகளுக்கு ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, அரியலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, பெரம்பலூர், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மற்றும் புதுவையில் கனமழையும் பெய்யும். அதன் தொடர்ச்சியாக, 29ம் தேதியில் வடதமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். இருப்பினும், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யும் அதனால் அந்த பகுதிகளுக்கு ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் சென்னை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், புதுக்கோட்டை, திருச்சி, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், கரூர், நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதற்காக ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. டிட்வா புயல் காரணமாக அதிகனமழை பெய்யும் வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. அதிகனமழை பெய்யும் வாய்ப்புள்ளதால் தான் ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்று, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான, மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழக கடலோரப்பகுதிகள், குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகள் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளை பொருத்தவரையில் காலை முதல் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்திலும் 29ம் தேதி காலை முதல் 30ம் தேதி வரை மணிக்கு 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 100 கிலோ மீட்டர் வேகத்திலும் பலத்த காற்று வீசும். டிசம்பர் 1ம் தேதி முதல் காற்றின் வேகம் படிப்படியாக குறையக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள். தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் உள்ள ஆழ்கடல் மீனவர்கள் உடனே கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். டிட்வா புயல் கடலில் மையம் கொண்டுள்ளதால் துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு 1, 2, 3 ஏற்றப்பட்டுள்ளன.
முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு: புயல் பாதிப்புகளை எதிர்கொள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று தலைமை செயலகத்தில் பல்வேறு துறை உயர் அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகமும் மேற்கொள்ள வேண்டிய ஆயத்த நடவடிக்கைகள் குறித்து அறிவுரை வழங்கினார். அப்போது, கடந்த 2021-25ம் ஆண்டுகளில் மாநில பேரிடர் நிவாரண நிதிக்கு ஒன்றிய அரசு ஒதுக்கீடு செய்த ரூ.5351.9 கோடியை விட தமிழ்நாடு அரசு கூடுதலாக ரூ.9170.48 கோடி செலவு செய்துள்ளது. இந்த நிதியாண்டுக்கான நிதி 2வது தவணை ரூ.661.20 கோடியும், 2வது தவணை ரூ.165.30 கோடி என மொத்தம் ரூ 826.50 கோடி ஒன்றிய அரசிடம் இருந்து வரவேண்டியுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: மழைக்காலங்களில் அதிகமாக பாதிக்கப்படுவது ஏழை எளிய மக்கள்தான். அதனால், இந்த அரசு பொறுபேற்ற பிறகு, பேரிடர் மேலாண்மையில் தனி கவனம் செலுத்தி, இயற்கை இடர்பாடுகளின்போது ஏற்படும் பாதிப்புகளை பெருமளவு குறைப்பதற்கு தேவையான எல்லா நடவடிக்கைகளையும் தொடர்ந்து எடுத்து வருகிறது. அது அப்படியே தொடர வேண்டும். இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பே, ஆயத்த கூட்டங்களை நடத்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்திருப்பதோடு, மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வு கூட்டங்களையும் தான் நடத்தி உள்ளேன். மேலும் அமைச்சர்களும், அரசு உயர் அதிகாரிகளும் களத்தில் ஆய்வு செய்துகொண்டு, தயார் நிலையில் இருக்க வேண்டும்.
பேரிடர் மேலாண்மைக்கு தேவையான நிதியை முறையாக ஒதுக்கீடு செய்து, முறையாக பயன்படுத்தி, மக்கள் பயன்பெறும் வகையில் அவர்களுடைய பணி அமைய வேண்டும். காலநிலை மீள்தன்மைக்கு தேவையான நடவடிக்கைகளையும் தொடர்ந்து, கவனத்துடன் செயல்படுத்தப்பட வேண்டும். நாளை (29ம் தேதி) மற்றும் 30ம் தேதிகளில், குறிப்பிட்ட சில மாவட்டங்களில் அதிகனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளதை தொடர்ந்து, அனைத்து அரசு துறைகளும், குறிப்பாக வருவாய்த்துறை, உள்ளாட்சி துறை, காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை, மீன்வளத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து, மக்கள் பணியாற்ற வேண்டும். தேவையான மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகளை உடனடியாக அனுப்பி வைத்திடவும், மீட்பு மற்றும் நிவாரண மையங்களை தயார் நிலையில் வைத்து, மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை அங்கு முறையாக வழங்குவதற்கு ஏற்பாடுகளை செய்ய வேண்டும். அனைத்து மாவட்ட ஆட்சி தலைவர்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கூட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தலைமை செயலாளர் முருகானந்தம், வருவாய் நிர்வாக ஆணையர் எம்.சாய்குமார், எரிசக்தித் துறை செயலாளர் மங்கத் ராம் சர்மா, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, உள்துறை செயலாளர் தீரஜ்குமார், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலாளர் அமுதா, பள்ளிக்கல்வி துறை செயலாளர் சந்தரமோகன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் கார்த்திகேயன், சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன், நீர்வளத்துறை செயலாளர் ஜெயகாந்தன், நெடுஞ்சாலைத்துறை செயலாளர் செல்வராஜ், உயர்கல்வி துறை செயலாளர் சங்கர், கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை செயலாளர் சுப்பையன், பேரிடர் மேலாண்மை ஆணையர் சிஜி தாமஸ் வைத்யன், தீயணைப்புத்துறை இயக்குநர் சீமா அகர்வால், சட்டம் மற்றும் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண் மற்றும் காவல்துறை – அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
* கண்காணிப்பு அலுவலர்களாக 8 பொறியாளர்கள் நியமனம்
டிட்வா புயல் நிமித்தமாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைய உள்ளதால் கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களான செங்கல்பட்டு, கடலூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், விழுப்புரம், தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் வடகிழக்கு பருமழையை எதிர்கொள்ள எடுக்கப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை பணிகளை கண்காணிக்கும் பொருட்டு நீர்வளத்துறையின் 8 பொறியாளர்களை கண்காணிப்பு அலுவலர்களாக நியமித்து அரசு ஆணையிட்டுள்ளது. கண்காணிப்புப் பொறியாளர்கள் 2ம் தேதி வரை தங்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் நடைபெற்று வரும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கைப் பணிகளை கள ஆய்வு செய்து அரசு செயலாளர், அரசு உயர் அலுவலர்களுக்கும் அறிக்கையாக சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
