பெரம்பலூரில் ஒருங்கிணைந்த தொழிற்பூங்கா திட்டம் தொடர்பாக முதலீட்டாளர்களுடன் ஆலோசனை

பெரம்பலூர், ஜன 11: பெரம்பலூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த தொழிற்பூங்கா அமைக்கும் திட்டம் தொடர்பாக, முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் முனைவோர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் வெங்கடபிரியா தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு தொழில் மேம்பாட்டு கழக செயல்இயக்குனர் அணிஸ்சேகர் முன்னிலை வகித்தார். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளதாவது: தமிழக முதல்வர் தொழிற்பூங்கா அமைப்பதை ஊக்குவிக்கும் வகையிலும், உட்கட்டமைப்பு வசதி ஏற்படுத்துவதற்கும், ஒருங்கிணைந்த தொழிற்பூங்கா அமைக்க முன்வரும் தொழில் முனைவோர்களுக்கு உட்கட்டமைப்பிற்கான செலவினத் தொகையில் 50 சதவீதம் அல்லது ரூ.2.50 கோடி இதில் எது குறைவோ அதனை நிபந்தனைகளுக்கு உட்பட்டு நிதியுதவி வழங்கப்படும் என தமிழக அரசால் அறிவிக்கபட்டுள்ளது.

அதனடிப்படையில், விவசாயத் தொழிலை முதன்மையாக கொண்டுள்ள பெரம்பலூர் மாவட்டத்தில் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கும் திட்டம், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் மற்றும் பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் ஆகியவை மாவட்ட தொழில் மையம் மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் கிராமப்புற இளைஞர்களுக்கு அதிகமான வேலைவாய்ப்பினை உருவாக்கும் விதமாக புதிய தொழில் நிறுவனங்கள் இந்த ஒருங்கிணைந்த தொழிற்பூங்காவில் அமைய உள்ளதால் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் அமையும். எனவே முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் முனைவோர்கள் அதிகளவில் கலந்து கொண்டு தங்களது நிறுவனங்களை அமைத்து பயனடைந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார். இந்தகூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன், சார்ஆட்சியர் பத்மஜா, திட்ட அலுவலர் (தமிழ்நாடு அரசு தொழில் மேம்பாட்டு கழகம) தமிழ்செல்வி தமிழ்நாடு சிறு தொழில்கள் மேம்பாட்டு கழக கிளை மேலாளர் ஜெயலட்சுமி, உதவி இயக்குநர் (கைத்தறி) ராஜேந்திரன் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் செந்தில்குமார், மற்றும் தொழில் முனைவோர்கள், முதலீட்டாளர்கள் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>