×

தென்மேற்கு வங்கக்கடலில் புயல் உருவானது: சென்னைக்கு 700 கி.மீ தூரத்தில் மையம்; இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தென்மேற்கு வங்கக்கடலில் புயல் உருவானது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை இந்த ஆண்டு முன்னதாகவே தொடங்கிவிட்ட நிலையில் அக்டோபர் முதல் வாரத்தில் இருந்தே மழை பெய்து வருகிறது. இடையில் தென் சீனக் கடல் பகுதியில் தொடர்ச்சியாக உருவான கடும் புயல்கள் காரணமாக தமிழகத்தில் சில நாட்கள் வறண்ட வானிலை காணப்பட்டது. கடந்த இரண்டு வாரத்தில் வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப்பகுதிகள் தொடர்ச்சியாக உருவாகி வருகின்றன. இந்நிலையில், தற்போது புயல் உருவாகி அதன் மூலம் தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான பருவமழை பெய்யும் சாதகமான சூழ்நிலை உருவாகியுள்ளது.

அதற்கு முன்னோட்டமாக இலங்கை அருகே கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு உருவான காற்றழுத்தம் மெல்ல வலுப்பெற்று தற்போது காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறியுள்ளது. இலங்கை அருகே நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக இலங்கையில் காற்றுடன் கூடிய கடும் மழை பெய்துள்ளது. பெரும்பாலான இடங்கள் அங்கு மழை வெள்ளம் சூழ்ந்து பொதுமக்கள் அங்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இலங்கைக்கு தென்கிழக்கு பகுதியில் நிலை கொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி இலங்கையின் அம்பாறைக்கு மிக அருகில் நிலை கொண்டு இருக்கிறது.

யாழ்ப்பாணத்துக்கு தெற்கே 200 கிமீ தொலைவிலும், வேதாரண்யத்தில் இருந்து 250 தெற்கு -தென்கிழக்கேயும் ராமேஸ்வரத்துக்கு 200 கிமீ தொலைவிலும் தற்ேபாது நிலை கொண்டு இருக்கிறது. இது இலங்கையின் தென்கிழக்கு முனையில் இருந்து வடக்கு முனையான காங்கேசன் துறையில் நாளை இறங்கும் என்றும் கணிக்கப்பட்டது. ஆனால், காற்றின் வேக மாறுபாடு காரணமாக மேற்கண்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது வலுப்பெற்று தமிழகத்தின் கோடியக்கரை பகுதியை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்நிலையில் தென்மேற்கு வங்கக்கடலில் புயல் உருவானது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த புயலுக்கு ‘டிட்வா’ என்று பெயரிடப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது. டிட்வா புயல் வட தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும். அடுத்த 48 மணி நேரத்தில் வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோர பகுதியை நோக்கி நகரும். புயல் நவம்பர் 30ம் தேதி அதிகாலையில் வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதியை வந்தடையும்.

சென்னைக்கு 700 கி.மீ. தூரத்தில் தெற்கு, தென்கிழக்கு திசையில் டிட்வா புயல் மையம் கொண்டுள்ளது. புதுச்சேரிக்கு 610 கி.மீ. தொலைவில் தெற்கு – தென்கிழக்கு திசையில் புயல் மையம் கொண்டுள்ளது. கடந்த 6 மணி நேரத்தில் 15 கி.மீ. வேகத்தில் புயல் நகர்ந்து வருகிறது என்று தெரிவித்துள்ளது.

Tags : Cyclone ,southwest Bay of Bengal ,Chennai ,India Meteorological Department ,Tamil Nadu ,South China Sea… ,
× RELATED அரசுப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு...