×

மயிலாடுதுறையில் கட்டுமான தொழிலாளர்கள் 10,886 பேருக்கு பொங்கல் பரிசு

மயிலாடுதுறை, ஜன.11: மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி மற்றும் குத்தாலம் தாலுகாக்களில் 7,525 ஆண்கள், 3,371 பெண்கள் என மொத்தம் 10,886 நபர்கள் கட்டுமானத்தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்துள்ளனர். இவர்களுக்கு மயிலாடுதுறை, சீர்காழி, மற்றும் தரங்கம்பாடி பகுதிகளில் பொங்கல் பரிசு வழங்கப்பட்டது. மயிலாடுதுறை நாராயணசாமி நகராட்சி மேனிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் லலிதா பொங்கல் தொகுப்பு பையை வழங்கினார். இந்த விழாவில் நலவாரிய உதவி கணக்கு அலுவலர் ராஜராஜன், தமிழ்நாடு கட்டட தொழிலாளர் மத்திய சங்க மாநில செயற்குழு உறுப்பினர் ஜெகமுருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதுகுறித்து கட்டுமான தொழிலாளர்கள் மத்திய சங்க மாநில செயற்குழு உறுப்பினர் ஜெகமுருகன் கூறுகையில், வாரிய தலைவராக இருந்த பொன்குமார் எம்ஜி.ஆரிடம் வாதாடி ஜெயலிதாவிடம் போராடி கலைஞரிடத்தில் கட்டுமானத்தொழிலாளர்களுக்கான வாரியம் பெற்று ரூ.2,600 கோடி பணத்தை சேர்த்து வைத்துள்ளார். இந்த வாரிய தொகையை கடந்த 2 ஆண்டாக எடுத்து வேறு காரியத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. சென்ற ஆண்டு கொரோனா கட்டுப்பாடு காலத்தில் வாரியப் பணத்தில் நபர் ஒருவருக்கு ரூ.5 ஆயிரம் எடுத்து வழங்கவேண்டும் என்று நீதிமன்றத்தில் வாதாடி உத்தரவு பெற்றும் இந்த அரசானது, அவ்வாறு வழங்கவில்லை, முதலில் ரூ.1000 மறுமுறை ரூ.1000 மட்டுமே வழங்கியது. ரூ.5 ஆயிரம் வழங்க நீதிமன்றம் சொல்லியும் கேட்காத இந்த அரசு தேர்தலை கணக்கில் கொண்டு வாரிய பணத்தை எடுத்து இவர்கள் கையிலிருந்து கொடுப்பதைபோல் பொங்கல் பரிசு பையை வழங்குவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்றார்.

Tags : construction workers ,Mayiladuthurai ,
× RELATED மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால்...