வங்கி அதிகாரியின் தாய் தூக்கிட்டு தற்கொலை

ஈரோடு,  ஜன. 11: ஈரோடு கலைஞர் கருணாநிதி நகர் தெற்கு முதல் வீதியை சேர்ந்தவர்  ஞானசேகரன் (61). இவர், திருச்சி பெல் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு  பெற்றவர். இவரது மனைவி புனிதவதி (57). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். மகள் சென்னையில் தங்கி அங்குள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில்  அதிகாரியாகவும், மகன் கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள சாப்ட்வேர்  நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். புனிதவதி கடந்த 10 ஆண்டுகளாக சரவாங்கி  (முடக்குவாத) நோயால் பாதிக்கப்பட்டு, வீட்டிலேயே மருந்து, மாத்திரைகளை  சாப்பிட்டு வந்தார். ஞானசேகரனும், புனிதவதியும் மட்டும் தனியாக வசித்து  வந்தனர். ஞானசேகரன் கடந்த 7ம் தேதி பழனியில் உள்ள அவரது சகோதரர் வீட்டிற்கு  சென்று விட்டு, நேற்று காலை அவரது வீட்டுக்கு வந்தார்.

வீட்டின் கதவு  உள்புறம் தாழிடப்பட்டு இருந்தது. நீண்ட நேரமாக கதவை தட்டியும், புனிதவதி  திறக்கவில்லை. இதனால், கதவை உடைத்து, உள்ளே சென்று பார்த்தபோது, புனிதவதி  வீட்டில் உள்ள பேனில் தூக்குபோட்டு இறந்த நிலையில் கிடந்ததை பார்த்து  அதிர்ச்சி அடைந்தார். ஈரோடு தாலுகா போலீசாருக்கு ஞானசேகரன் அளித்த  தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், புனிதவதியின் உடலை  கைப்பற்றி விசாரணை நடத்தினர். உடல் அழுகிய நிலையில் துர்நாற்றம் வீசியதால்,  புனிதவதி தற்கொலை செய்து கொண்டு இரு நாட்கள் ஆகி இருக்க கூடும் என்றனர்.  உடலை பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி  வைத்தனர். இது குறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை  செய்து வருகின்றனர்.

Related Stories:

>