பாரியூர் கோயில் திருவிழாவில் சோகம்: மின்சாரம் தாக்கி சிறுவன் பலி

கோபி, ஜன.11: கோபி அடுத்த பாரியூர் கொண்டத்து காளியம்மன் குண்டம் தேர்த் திருவிழாவின் இறுதியில் மலர் பல்லக்கு நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். இதற்காக பாரியூரில் இருந்து கோபி வரை அலங்கரிக்கப்பட்ட மலர் பல்லக்கில் சாமி ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு கோபி பஸ் நிலையம் எதிரே உள்ள தெப்பக்குளம் பகுதியில் நிறுத்துவது வழக்கம். இதற்காக தெப்பகுளம் பகுதி முழுவதும் மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இந்த குளத்தில் நேற்று நடைபெற்ற தெப்பம் விடும் விழாவை காண குளத்தை சுற்றிலும் ஏராளமான பக்தர்கள் காத்திருந்தனர்.

அப்போது, அந்த பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த கபிலர் வீதியை சேர்ந்த கணேஷ் மகன் மதன்குமார் (13) என்ற சிறுவன் குளத்தின் உள்பகுதிக்கு சென்று அங்குள்ள தடுப்பு கம்பியை பிடித்து குளத்தை எட்டி பார்க்க முயன்ற போது, எதிர்பாராத விதமாக மதன்குமார் மீது மின்சாரம் பாய்ந்தது. அவனது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே சிறுவன் மதன் உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த கோபி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிறுவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோயில் திருவிழாவின் போது, சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories:

>