×

போடியில் புதர்மண்டிக் கிடக்கும் கழிவுநீர் வாறுகால்கள் பொதுமக்களுக்கு சுகாதாரக்கேடு

போடி, ஜன. 11: போடியில் கழிவுநீர் வாறுகால்கள் புதர்மண்டிக் கிடப்பதால், கொசுக்கள் உருவாகி பொதுமக்களுக்கு சுகாதாரக்கேட்டை உருவாக்குகிறது. எனவே, நகராட்சி நிர்வாகம் கழிவுநீர் வாறுகால்களை தூர்வார வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். போடி நகராட்சியில் பெரியாண்டவர் ஹைரோடு, காமராஜர் சாலை ஆகியவை முக்கியச் சாலைகளாக உள்ளன. இந்த சாலைகளில் முக்கிய வர்த்தக நிறுவனங்கள், கடைகள், ஓட்டல்கள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் உள்ளன. இந்த சாலைகளின் இருபுறமும் அகன்ற கழிவுநீர் ஓடைகள் உள்ளன. நகரின் ஒட்டுமொத்த கழிவுநீரும் இந்த ஓடைகள் வழியாக கடத்தப்படுகின்றது. இந்த கழிவுநீர் ஓடைகளை தூர்வாராததால் புதர்மண்டிக் கிடக்கின்றன.

 மழை காலங்களில் கழிவுநீர் ஓடை நிரம்பி சாலைகளில் மழைநீர் ஆறாக ஓடும். பின்னர் கழிவுநீர் கால்வாய்கள் மூலம் கொட்டகுடி ஆற்றில் கலக்கிறது. போதிய வடிகால் வசதி இல்லாததால், மழை காலங்களில் நகர் பொதுமக்கள் போக்குவரத்துக்கு அவதிப்படுகின்றனர். கழிவுநீர் கால்வாய்கள், ஓடைகளை தூர்வாராததால், குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்து கிடக்கின்றது. பல வாறுகால்களில் மண் மேவிக் கிடக்கிறது. மேலும், முட்செடிகள், ஆகாயத்தாமரைகள் வளர்ந்து புதர்மண்டிக் கிடக்கிறது. கழிவுநீர் தேக்கத்தில் கொசுக்கள் உருவாகி பொதுமக்களின் தூக்கத்தை கெடுக்கின்றன; சுகாதாரக்கேடும் ஏற்படுகிறது. எனவே, பொதுமக்களின் நலன்கருதி நகராட்சி நிர்வாகம் கழிவுநீர் வாறுகால்கள், ஓடைகளை தூர்வார வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

Tags : Putharmandi ,public ,Bodi ,
× RELATED போடி அருகே ஓடைப் பாலம் அமைக்கும் பணி...