×

இரவோடு இரவாக கண்மாய் தண்ணீர் திறப்பு விவசாயிகள் மறியல் போராட்டம் காரைக்குடியில் பரபரப்பு

காரைக்குடி, ஜன.11: காரைக்குடி அருகே குன்றக்குடி பகுதியில் உள்ள கண்மாயை விவசாயிகள் அனுமதியின்றி திறந்த அதிகாரிகளை கண்டித்து திடீர் மறியல் போராட்டம் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. காரைக்குடி அருகே குன்றக்குடி பெரிய கண்மாயை நம்பி 110 ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்கள் உள்ளன. கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக கண்மாய் தற்போது நிறைந்து காணப்பட்டது. இந்நிலையில் திடீரென நேற்று முன்தினம் இரவு கண்மாய் உபரி நீர் வெளியேற்றப்பட்டது. தண்ணீரை திறந்துவிட்ட அதிகாரிகளை கண்டித்து அப்பகுதி விவசாயிகள் 150க்கும் மேற்பட்டோர் நேற்று திடீரென மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் பரபரப்பு ஏற்பட்டது. டிஎஸ்பி அருண் தலைமையில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததன் பேரில் கலைந்து சென்றனர். விவசாயிகள் கூறுகையில், கண்மாய்க்கு தண்ணீர் வரக்கூடிய வரத்துக்கால்வாய்களை தூர்வாரி வைத்துள்ளோம். தொடர் மழையால் தற்போது விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோடை விவசாயத்துக்காக இருக்கும் தண்ணீரை பயன்படுத்த திட்டமிட்டு இருந்தோம். ஆனால் அதிகாரிகள் விவசாயிகளின் கருத்தை கேட்காமல் பெரிய மதகுகளை திறந்து தண்ணீரை வெளியேற்றி உள்ளனர். இதனால் விவசாயத்துக்கு தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்றனர்.

Tags : Karaikudi ,
× RELATED “சர்வாதிகார நாடுகளை போல பாஜக ஆட்சி உள்ளது” : கார்த்தி சிதம்பரம்