×

சாலையின் இருபுறமும் மரங்கள் அடர்ந்துள்ள அம்மாபட்டி சாலை

திருமங்கலம், ஜன.11: கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் இருபுறமும் மரங்கள் அடர்ந்து திருமங்கலம் அம்மாபட்டி தங்களாசேரி சாலை காட்சியளிப்பது இந்த வழியை செல்வோரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. திருமங்கலம் பகுதியை சுற்றி ஏராளமான கிராமங்கள் அமைந்துள்ளன. ஆனால் இவற்றில் மாதிரி சாலையாக திகழ்ந்து வருகிறது அம்மாபட்டி-தங்களாசேரி சாலை. திருமங்கலத்திலிருந்து 12 கி.மீ தூரத்திலுள்ளது அம்மாபட்டி. இங்குள்ள பெரியகண்மாய் இந்த தாலுகாவில் ஒவ்வொரு ஆண்டும் மழைகாலங்களில் நிரம்பி விவசாயிகளை வாழவைத்து வருகிறது. இந்த அம்மாபட்டி கண்மாய்கரையையொட்டி தங்களாசேரி வழியாக சேடபட்டிக்கு சாலை செல்கிறது.

சுமார் 5 கி.மீ தூரம் செல்லும் இந்த சாலையின் இருபுறமும் புளியமரங்கள், வேப்பமரங்கள் அடர்ந்து காட்சி தருகிறது. இந்த வழியாக செல்லும் வாகனோட்டிகள் குளுமையான இந்த மரத்தடியில் சிறிது நேரம் நின்று பயணம் செய்ய விரும்புகின்றனர். மரங்களின் அருகேயே வயல்வெளிகள் என அம்மாபட்டி தங்களாசேரி சாலை கண்களுக்கு குளிர்ச்சியாகவே காணப்படுகிறது.தங்களாசேரி, அம்மாபட்டி பொதுமக்கள் கூறுகையில், மரங்களின் முக்கியத்துவத்தை எங்கள் ஊர் சாலை உணர்த்தி வருகிறது. கடும் கோடைகாலத்திலும் கூட இந்த சாலையை கடக்கும் போது வெப்பத்தின் தாக்கம் தெரியாது. நீண்ட நாள்களுக்கு பின்பு தற்போது புதிய தார்சாலை போடப்பட்டுள்ளது. இதன் சுகத்தை அனுபவிக்கவே வாகனோட்டிகள் பலரும் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர் என்றனர்.

Tags : road ,
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி