×

இடும்பன் மலைப்பாதை அடைப்பு பழநியில் பக்தர்கள் பரிதவிப்பு

பழநி, ஜன.11: பழநியில் இடும்பன் மலையில் இருந்து கிரிவீதியை அடையும் பாதை அடைக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் பரிதவிக்கின்றனர். அறுபடை வீடுகளில் 3ம் படை வீடாக விளங்குவது பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலாகும். இங்கு நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஒன்று தைப்பூசம். இவ்விழாவிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வருவது வழக்கம். இவ்வாறு வரும் பக்தர்கள் இடும்பன் குளத்தில் நீராடி விட்டு பழநி கோயிலுக்கு செல்வது வழக்கம். இதற்காக பிரத்யேக பாதை உள்ளது. இந்த பாதை கிழக்கு கிரிவீதியை அடையும் வகையில் உள்ளது.

இந்த பாதை இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு தற்போது அடைக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் செல்லாமல் இருப்பதற்காக அடைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கிரிவீதியை இணைக்கும் அனைத்து சாலைகளும் தற்போது திறந்து விடப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்த பாதை மட்டும் தற்போதுவரை அடைக்கப்பட்டே இருக்கிறது. இதனால் இடும்பன் குளத்தில் குளித்து விட்டு நடந்து வரும் பக்தர்களும், அலகு குத்தி வரும் பக்தர்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். தடுப்புகளில் இடித்துக் கொள்வதால் அலகு குத்தி வரும் பக்தர்கள் பலர் காயமடைந்து விடுகின்றனர். மேலும் கிரிவீதியை அடைய சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே, அடைக்கப்பட்டுள்ள தடுப்புகளை அகற்றி பக்தர்கள் எளிதில் கிரிவீதியை அடைய வழிவகை செய்ய வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Devotees ,Palani ,Idumban ,
× RELATED கோடை காலத்தை சமாளிக்க பண்ணைக்குட்டைகள் அமைக்க விவசாயிகள் ஆர்வம்