சென்னை: தென்குமரி கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. டெல்டா மாவட்டங்களிலும் கடந்த 3 நாட்களாக தொடர் மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகள், குடியிருப்புகள், வயல்களில் மழைநீர் சூழ்ந்தது. நேற்று முன்தினம் மாலைக்கு பின்னர் மழை ஓய்ந்தது.
தொடர் மழை காரணமாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் 50,000 ஏக்கர் இளம் சம்பா, தாளடி பயிர்கள், மயிலாடுதுறை மாவட்டத்தில் 10,000 ஏக்கர் சம்பா நேரடி விதைப்பு பயிர்கள், திருவாரூர் மாவட்டம் 15,000 ஏக்கர் சம்பா, தாளடி பயிர்கள், தஞ்சாவூர் மாவட்டத்தில் 15,000 ஏக்கர் பயிர்களும், புதுக்கோட்டை மாவட்டத்தில் 300 ஏக்கர் சம்பா பயிர்களும் என மொத்தம் டெல்டா மாவட்டங்களில் 1 லட்சம் ஏக்கர் பயிர்கள் கடந்த 3 நாட்களாக மழைநீரில் மூழ்கியுள்ளது. இதேபோல் கடலூர் மாவட்டத்தில் 3 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது.
பயிர்கள் அழுகும் நிலையில் இருப்பதால் விவசாயிகள் கவலையடைந்தனர். நேற்று சற்று மழை ஓய்ந்ததால் வயலில் தேங்கி நிற்கும் தண்ணீரை வடிய வைக்கும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இதேபோல், டெல்டா மாவட்டங்களில் 7வது நாளாக நேற்று 1.50 லட்சம் மீனவர்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். சுமார் ரூ.400 கோடி வரை மீன் ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது. தாமிரபரணி ஆற்றில் அதிகளவு வெள்ளம் பெக்கெடுத்து ஓடுகிறது. நெல்லை மற்றும் சுற்றுவட்டாரங்களில் பெய்த கனமழையால் 15 வீடுகள் இடிந்தன.
