×

ஒட்டன்சத்திரம் அருகே 7 ஆண்டுக்குப்பின் நிரம்பி வழியும் சடையன்குளம் விவசாயிகள் மகிழ்ச்சி

ஒட்டன்சத்திரம், ஜன. 11: ஒட்டன்சத்திரம் அருகே, 7 ஆண்டுகளுக்கு பின், தங்கச்சியம்மாபட்டி சடையன்குளம்  நிரம்பி வழிவதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஒட்டன்சத்திரம் அருகே தங்கச்சியம்மாபட்டி ஊராட்சியில் சுமார் 300 ஏக்கரில் சடையன்குளம் அமைந்துள்ளது. இக்குளம் தங்கச்சியம்மாபட்டி, அம்பிளிக்கை, ஓடைப்பட்டி, சிந்தலப்பட்டி ஆகிய கிராமங்களின் குடிநீர் மற்றும் விவசாய ஆதாரமாக இருந்து வருகிறது. கடந்தாண்டு அரசு குடிமராமத்து திட்டத்தின் கீழ் தூர்வாருவதற்கு ரூ.36.70 லட்சம் நிதி ஒதுக்கி, பணி தொடங்கப்பட்டது. ஆனால், அரசியல் தலையீட்டால் முறைகேடு நடப்பதாக நமது நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. அதன்பின், மாவட்ட கலெக்டரால் தூர்வாரும் திட்டம் ரத்து செய்யப்பட்டது.
 
இதனையடுத்து விழுதுகள் மற்றும் வெற்றித்துளிகள் அமைப்பைச் சேர்ந்த தன்னார்வலர்களிடம் இப்பணி ஒப்படைக்கப்பட்டது. பின்பு ரூ.30 லட்சம் செலவில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, சடையன்குளம் தூர்வாரப்பட்டது. தற்போது இப்பகுதியில் தொடர் மழையால் பரப்பலாறு அணையிலிருந்து நீர் திறக்கப்பட்டு, சடையன்குளம் நிரம்பியது. கடந்த சுமார் 7 ஆண்டுகளுக்கு பின்பு குளம் நிரம்பியதை அறிந்த இப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனால், 3 ஆண்டுகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு மற்றும் விவசாய பணிகளுக்கும் தட்டுப்பாடு இருக்காது என தெரிவித்தனர். குளம் நிறைந்ததால், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் கோபி ஆய்வு செய்தார். உதவிப் பொறியாளர் உதயகுமார், மேற்பார்வையாளர் அழகேசன், விழுதுகள் அமைப்பின் வஞ்சிமுத்து ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : Sadayankulam ,Ottanchatram ,
× RELATED ஒட்டன்சத்திரம் பகுதியில் அய்யலூர்...