×

ஒரு ராஜ்யசபா சீட்டுக்கெல்லாம் அதிமுகவுடன் கூட்டணி இல்லை: பிரேமலதா ‘நச்’

குன்னூர்: ‘ஒரு ராஜ்யசபா சீட்டுக்காக மட்டுமே அதிமுகவுடன் கூட்டணி அமைப்பது என்ற எண்ணம் தேமுதிகவிற்கு இல்லை’ என்று பிரேமலதா விஜயகாந்த் கூறினார். நீலகிரி மாவட்டம் குன்னூருக்கு தேமுதிக சார்பில் உள்ளம் தேடி இல்லம் நாடி என்கிற தலைப்பில் தேர்தல் பரப்புரைக்காக அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று வந்தார். அவருக்கு படுகர் இன மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனைத்தொடர்ந்து, குன்னூர் அருகே கோடமலை கிராமத்திற்கு சென்று படுகர் இன மக்களின் பாரம்பரிய உடை அணிந்து பாரம்பரிய இசைக்கு ஏற்ப அவர்களுடன் உற்சாகமாக நடனமாடி மகிழ்ந்தார்.

தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: அதிமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு ராஜ்யசபா சீட் 2025ல் கொடுப்பதாக கூறி கையெழுத்திட்டு இருந்தனர். ஆனால் 2025ல் தரவில்லை. மாறாக 2026ல் கிடைக்கும் என்று சொல்லி இருக்கிறார்கள். அதனால் வெறும் ராஜ்யசபா சீட்டுக்கு மட்டுமே கூட்டணி அமைப்பது என்ற எண்ணம் தேமுதிகவிற்கு இல்லை. தொண்டர்கள் விரும்பும் கூட்டணி தமிழக மக்கள் விரும்பும் கூட்டணியை தேமுதிக அமைக்கும். எதிர்வரும் 2026ல் நடைபெற உள்ள சட்டமன்றத்தேர்தல் மக்கள் போற்றக்கூடிய தொண்டர்கள் விரும்பக்கூடிய வெற்றியை தேமுதிக பெறும்.

வடமாநிலத்தில் இருந்து வரும் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். ஆனால் ஓட்டுரிமை என்பது அவரவர்கள் பிறந்த மாநிலங்களில் இருக்க வேண்டும். இன்றைக்கு தமிழ்நாட்டில் அவர்களுக்கு ஓட்டுரிமை வழங்கினால் தவறான முன்னுதாரணமாக மாறிவிடும். அதற்கு என்றைக்கும் தேமுதிக துணை நிற்காது. இது போன்ற தவறு நிச்சயம் நடக்காது என்று உறுதியாக நம்புகிறோம். மீறி நடந்தால் மக்கள் புரட்சி வெடிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Tags : AIADMK ,Rajya Sabha seat ,Premalatha 'Nach ,Coonoor ,DMDK ,Premalatha Vijayakanth ,Ullam Thedi ,Nilgiris district ,
× RELATED பாஜ தேசிய செயல் தலைவராக பீகார்...