×

பொன்னாடைக்கு பதிலாக புத்தகங்களை கொடுங்கள்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை: திமுக இளைஞர் அணி செயலாளரும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: எனது 49வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் கட்சியினர் பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து வருவதை அறிந்தேன். பகட்டான கொண்டாட்டங்களை நான் ஒருபோதும் விரும்புவது இல்லை. கொள்கைப் பணியும், மக்கள் பணியும் இணைந்த பிணைப்பாக பிறந்தநாள் நிகழ்ச்சிகள் இருக்குமானால், அதுவே எனக்கு மனநிறைவு தரும். அந்தவகையில், ஏழை, எளியோர், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் உள்ளிட்டோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும்.

இதில், தலைமைக் கழகப் பேச்சாளர்கள், இளைஞர் அணி கண்டறிந்து தலைமை வசம் ஒப்படைத்துள்ள 200க்கும் அதிகமான இளம் பேச்சாளர்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தற்போது, நெல்லை, தூத்துக்குடி, உள்ளிட்ட தென்மாவட்டங்களில் பலத்த மழை பெய்துவரும் சூழலில், எங்கெல்லாம் பாதிப்பு ஏற்பட்டுள்ளதோ, அங்கெல்லாம் இளைஞர் அணி தோழர்கள் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது என் அன்பு வேண்டுகோள். வாக்காளர் படிவத்தை நிரப்பி சமர்ப்பிக்கும் பணிகளில் பொதுமக்களுக்கு உதவியாக கட்சி நிர்வாகிகளுடன் இளைஞர் அணி தோழர்களும் இணைந்து பணியாற்றுவதைக் கடமையாகக் கருத வேண்டும்.

என்னை நேரில் சந்தித்து வாழ்த்துக்கூற வரும் என் அன்புக்குரியவர்கள் பொன்னாடைகள், சால்வைகள், பரிசுகள், பூங்கொத்துகள் போன்றவற்றை தவிர்த்து, புத்தகங்கள், கருப்பு, சிவப்பு வேட்டிகள், மகளிர் சுயஉதவிக் குழுக்களின் தயாரிப்புப் பொருள்களைக் கொடுத்தால் மகிழ்ச்சி அடைவேன். எனது அடுத்த பிறந்தநாளிலும் கழக தலைவர் மீண்டும் தமிழ்நாட்டின் முதலமைச்சராகத் தொடர்வார், திராவிட மாடல் ஆட்சி தொடரும் என்ற வெற்றிச் செய்தியை உறுதி செய்யும் வகையில், நீங்கள் பணியாற்றுவதே உங்களிடம் எதிர்பார்க்கும் பிறந்தநாள் பரிசு. இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் அறிக்கையில் கூறியுள்ளார்.

Tags : Deputy Chief Minister ,Udhayanidhi Stalin ,Chennai ,DMK ,Youth Wing Secretary ,Tamil Nadu ,
× RELATED 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக – பாஜக...