×

தையூர் ஊராட்சியில் தெருக்களில் குப்பை அகற்றாததால் தொற்றுநோய் பரவும் அபாயம்: திடக்கழிவு திட்டம் செயல்படுத்த கோரிக்கை

திருப்போரூர். ஜன, 11 : தையூர் ஊராட்சி பகுதியில் உள்ள தெருக்களில் குப்பைகள் கொட்டுவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. திடக்கழிவு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சென்னையை ஒட்டி வளர்ந்து வரும் புறநகர்ப் பகுதியான தையூர் ஊராட்சியில் சுமார் 25 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். இங்கு ராஜேஸ்வரி நகர், ராமமூர்த்தி நகர், சூர்யா நகர், ரிச் உட் கார்டன், மூகாம்பிகை நகர், வி.ஐ.பி. நகர், கே.கே. நகர் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட வீட்டுகள் உள்ளன. அப்பகுதியில், கட்டப்பட்டுள்ள வீடுகள், அடுக்கு மாடி குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள், கடைகள், ஓட்டல்களில் இருந்து ஊராட்சி பணியாளர்கள் மூலம் கழிவுகள், குப்பைகள் பெறப்பட்டு வந்தன.

இந்நிலையில் கடந்த நான்கு வருடங்களாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாததால் அரசு அதிகாரிகளின் நேரடி மேற்பார்வையில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தையூர் ஊராட்சியில் குறிப்பாக திடக்கழிவு மேலாண்மை திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை. இதனால் பணியாளர்கள் வீடுகளில் இருந்து குப்பைகளை பெறும் திட்டம், தோல்வி அடைந்து விட்டது. இதனால் வீடு, கடைகளில் உள்ள குப்பைகள் அனைத்தும் அந்தந்த தெருக்களிலேயே கொட்டப்படுகின்றன. சில இடங்களில் மட்டும் அகற்றப்படும் குப்பைகள் ஓ.எம்.ஆர். சாலையின் ஓரம் கொட்டப்படுகின்றன. தையூர் மார்க்கெட் சாலை, ராஜேஸ்வரி நகர் சந்திப்பு  போன்றவற்றில். அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களும், கடை மற்றும் வர்த்தக நிறுவனங்களை வைத்திருப்பவர்களும் தங்களின் வீடு, கடையில் சேரும் குப்பைகளை தெருவிலேயே கொட்டிச் செல்கின்றனர்.

மேலும், அப்பகுதியில் வரும் மாடுகள், நாய்கள், பன்றிகள் தங்களின் உணவுகளைத் தேடி இந்த குப்பைகளை கிளறி விடுகின்றன. இதனால் அந்த பகுதி முழுவதுமே துர்நாற்றம் வீசுகிறது. இவ்வாறு கொட்டப்படும் குப்பைகள் காற்றில் பறந்து தெருவில் நடந்து செல்வோர் மீது விழுகிறது. இதனால், கொசு உற்பத்தியாகி தையூர் ஊராட்சியில் உள்ள குடியிருப்பில் வசிப்பவர்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. தற்போது உள்ளாட்சி நிர்வாகம் இன்றி அதிகாரிகளின் நேரடி நிர்வாகத்தின் கீழ் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படுவதால் தையூர் ஊராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தி தெருக்களில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டுமென தையூர் ஊராட்சி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : streets ,
× RELATED அதிகார நந்தி வாகனத்தில் உலா வந்த...