×

மழையால் பாதிக்கப்பட்டநெற்பயிர்களுக்கு உடனடியாக இழப்பீடு: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: பருவமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு உடனடி இழப்பீட்டை தமிழக அரசு வழங்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை நடப்பாண்டில் முன்கூட்டியே தொடங்கிய நிலையில் கடந்த அக்டோபர் 20, 21 ஆகிய தேதிகளில் பெய்த மழையில் காவிரி பாசன மாவட்டங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த குறுவைப் பயிர்களும், நடவு செய்யப்பட்டிருந்த சம்பா மற்றும் தாளடி பயிர்களும் சேதமடைந்தன.

ஆனால் தற்போது வரை பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீட்டை அரசு வழங்கவில்லை. மழையால் பாதிக்கப்பட்ட குறுவை பயிர்களில் விளைச்சல் பாதிக்கும் கீழ் குறைந்து விட்டது. அதேபோல், சம்பா மற்றும் தாளடி பயிர்களை ஒரு லட்சம் ஏக்கருக்கும் கூடுதலான பரப்பில் மறு நடவு செய்ய நேரிட்டது. அதனால் உழவர்களுக்கு பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அதை ஈடு செய்ய வேண்டியது கட்டாயம். எனவே, இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டு மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags : Anbumani ,Chennai ,PMK ,Tamil Nadu government ,Tamil Nadu ,
× RELATED சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில்...