திண்டிவனம்: தைலாபுரம் தோட்டத்தில் இன்று பாமக மாவட்ட செயலாளர்கள், மாநில நிர்வாகிகளுடன் ராமதாஸ் ஆலோசனை நடத்தினார். யாருடன் கூட்டணி என்பது குறித்து ஆத்தூரில் டிசம்பரில் நடக்கும் பொதுக்குழுவில் கலந்துபேசி அறிவிப்போம் என ராமதாஸ் கூறினார். பாமகவில் தந்தை, மகன் மோதலை தொடர்ந்து ராமதாஸ் தலைமையில் ஒரு அணியும், அன்புமணி தலைமையில் மற்றொரு அணியும் செயல்பட்டு வருகிறது. இந்த 2 அணிகளுமே போட்டி கூட்டங்களை நடத்தி ஆதரவாளர்களை திரட்டி வருகின்றனர். தங்களுக்குதான் மாம்பழம் சின்னம் ஒதுக்க வேண்டுமென 2 அணிகளுமே தனித்தனியாக தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளது. ராமதாஸ் வயது மூப்பு காரணமாக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்வதில் சிரமம் இருக்கும் என்பதால் தனது மூத்த மகள் காந்தியை செயல் தலைவராக நியமித்தார். அவரது மற்றொரு மகன் சுகந்தனையும் அரசியலில் களமிறக்கி உள்ளார். ஒரு பக்கம் தனி கட்சி துவங்குவதற்கான வேலைகளும் துரிதமாக நடந்து வருகிறது.
இதனிடையே கடந்த 18ம் தேதி திண்டிவனத்தில் உள்ள தனியார் மஹாலில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த பாமக மற்றும் வன்னியர் சங்க மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள் கூட்டம் மழை காரணமாக தள்ளிவைக்கப்பட்டருந்தது. இந்த நிலையில் இக்கூட்டம் இன்று (25ம் தேதி) தைலாபுரம் தோட்டத்தில் காலை 11 மணிக்கு துவங்கியது. பாமக மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள், வன்னியர் சங்க நிர்வாகிகள் மட்டுமல்லாமல் மாநில நிர்வாகிகள், அணைத்து மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களும் இந்த கூட்டத்தில்கலந்துகொண்டனர். கூட்டத்தில் கட்சி கவுர தலைவர் ஜி.கே.மணி, செயல் தலைவர் காந்தி உள்ளிட்ட 400க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
நிர்வாகிகளிடம் பேசிய ராமதாஸ், 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்க கோரி பாமக சார்பில் டிசம்பர் 12ம் தேதி தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நடக்க உள்ள ஆர்ப்பாட்டம் குறித்து துண்டறிக்கைகள் அச்சிட்டு வீடு தோறும் வழங்க வேண்டும்.
கண்டிப்பாக கூட்டணி அமைத்து தான் நாம் தேர்தலை எதிர்நோக்க உள்ளோம். யாருடன் கூட்டணி, எத்தனை தொகுதியில் போட்டியிடுவது என்பது குறித்து தேர்தலின்போது நமது நிலைப்பாட்டை அறிவிப்போம் என்றார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: டிசம்பர் 12ம் தேதி 10.5 சதவீத இடஒதுக்கீட்டிற்காக மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறோம். தேர்தல் வந்துள்ளதால் அதற்குள் கொடுத்து விடுவார்கள். அப்படி கொடுக்கவில்லை என்றால் தேர்தல் முடிந்தபிறகு லட்சக்கணக்கான பேர் திரள வேண்டிய நிலை ஏற்படும். வன்னிய சமுதாய மக்களுக்காக மட்டுமல்ல எல்லா சமுதாய மக்களுக்காகவும் பாடுபட்டு வருகிற கட்சி பாமக. 324 சமுதாய மக்களுக்காகவும் நாங்கள் போராடுகிறோம். அவர்களது கோரிக்கைகளையும் நாங்கள் முன் வைக்கிறோம். கூட்டணி குறித்து கருத்து கேட்க டிசம்பர் 30ல் சேலம் ஆத்தூர் தலைவாசலில் பொதுக்குழு கூடி ஆலோசிப்போம். அங்கு கூட்டணி பற்றி முடிவெடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.
