×

சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு நடிகர் ஜெயராமிடம் விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வுக் குழு முடிவு

திருவனந்தபுரம்: சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு தொடர்பாக பிரபல நடிகர் ஜெயராமிடம் விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வுக் குழு தீர்மானித்துள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் பதிக்கப்பட்டிருந்த தங்கத் தகடுகளை செம்புத் தகடுகள் என்று கூறி சீரமைப்புப் பணிகளுக்காக சென்னைக்கு கொண்டு சென்ற விவகாரம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கேரள உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு 2 வழக்குகளை பதிவு செய்தது. இந்த வழக்குகளில் தங்கத் தகடுகளை சென்னைக்கு கொண்டு சென்ற உண்ணிகிருஷ்ணன் போத்தி மற்றும் செம்புத் தகடுகள் என்று சான்றிதழ் கொடுத்த சபரிமலை கோயில் முன்னாள் நிர்வாக அதிகாரி முராரி பாபு, முன்னாள் திருவாபரணம் கமிஷனர் பைஜு, முன்னாள் நிர்வாக அதிகாரி சுதீஷ்குமார் , திருவிதாங்கூர் தேவசம் போர்டு முன்னாள் தலைவர்களான வாசு, பத்மகுமார் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தங்கத் தகடுகளை சென்னைக்கு கொண்டு சென்ற உண்ணிகிருஷ்ணன் போத்தி, அதிலிருந்து தங்கத்தை பிரித்து எடுத்து உருக்கி விற்பனை செய்தது விசாரணையில் தெரியவந்தது. பின்னர் இந்த தகடுகளில் மீண்டும் சிறிது தங்க முலாம் பூசி அதை பல்வேறு செல்வந்தர்களின் வீடுகளுக்கு கொண்டு சென்று பூஜை நடத்தி பணமும் வசூலித்துள்ளார். சென்னையில் உள்ள பிரபல நடிகர் ஜெயராமின் வீட்டுக்கும் இதேபோல் தங்கத் தகடுகளை கொண்டு சென்று பூஜை நடத்தி பணம் வாங்கியுள்ளார்.

இதைத் தொடர்ந்து நடிகர் ஜெயராமிடமும் விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வுக் குழு தீர்மானித்துள்ளது. இந்த வழக்கில் இவரை சாட்சியாக சேர்க்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் சிறப்பு புலனாய்வுக் குழு போலீசார் ஜெயராமிடம் விசாரணை நடத்த சென்னை செல்ல உள்ளனர்.

Tags : Special Investigation Team ,Jayaram ,Sabarimala ,Thiruvananthapuram ,Sabarimala Ayyappa temple ,Chennai ,
× RELATED பலாஷ் முச்சல் உடனான திருமணம் கைவிடப்...