சிட்னி: ஆஸ்திரேலியன் ஓபன் பேட்மின்டன் ஆடவர் ஒற்றையர் இறுதிப்போட்டியில் இந்திய நட்சத்திர வீரர் லக்சயா சென் அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றுள்ளார். ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் ஆஸ்திரேலியன் ஓபன் பேட்மின்டன் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று முன்தினம் நடந்த ஆடவர் ஒற்றையர் அரை இறுதிப் போட்டி ஒன்றில் இந்திய நட்சத்திர வீரர் லக்சயா சென், தைவான் வீரர் சோ டியன் சென் உடன் மோதி சிறப்பான வெற்றியை பதிவு செய்து இறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு அரை இறுதியில் ஜப்பான் வீரர் யூஷி தனாகா, லின் சுன் யியை வீழ்த்தி இறுதிக்கு தகுதி பெற்றார். இந்நிலையில், நேற்று நடந்த இறுதிப் போட்டியில் லக்சயா சென்-யூஷி தனாகா மோதினர். போட்டியின் துவக்கம் முதல் ஆக்ரோஷமாக மோதி ஆதிக்கம் செலுத்திய சென், முதல் செட்டை, 21-15 என்ற புள்ளிக் கணக்கில் எளிதில் வசப்படுத்தினார்.
தொடர்ந்து நடந்த 2வது செட்டில் அற்புதமாக ஆடிய அவர் 21-11 என்ற புள்ளிக்கணக்கில் அந்த செட்டையும் வென்றார். அதனால், 2-0 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிவாகை சூடிய அவர் ஆஸ்திரேலியன் ஓபன் பேட்மின்டன் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி சாதனை படைத்தார். நடப்பு 2025ம் ஆண்டில் லக்சயா சென் வெல்லும் முதல் பட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் ஹாங்காங் பேட்மின்டனில் இறுதிப் போட்டி வரை முன்னேறிய சென், அதில் தோல்வியை தழுவி சாம்பியன் ஆகும் வாய்ப்பை பறிகொடுத்தார்.
* மகளிர் பிரிவில் யங் சாம்பியன்
ஆஸ்திரேலியன் ஓபன் பேட்மின்டன் மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் நேற்று, தென் கொரியா வீராங்கனை ஆன் செ யங், இந்தோனேஷியா வீராங்கனை புத்ரி குசுமா வர்தனி மோதினர். இப்போட்டியில் அட்டகாசமாக ஆடிய யங், 21-16, 21-14 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி வாகை சூடி சாம்பியன் பட்டம் வென்றார்.
