×

மயிலாப்பூரில் ரவுடியை கொன்ற வாலிபர் துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு: காவலரை தாக்கிவிட்டு தப்ப முயன்றதால் இன்ஸ்பெக்டர் அதிரடி

சென்னை: மயிலாப்பூரில் ரவுடியை கொலை செய்த வழக்கில் பிடிக்க சென்றபோது, காவலரை அரிவாளால் தாக்கிவிட்டு தப்ப முயன்ற வாலிபரை இன்ஸ்பெக்டர் போலீசார் சுட்டுப்பிடித்தனர். சென்னை மயிலாப்பூர் விசாலாட்சி தோட்டம் சுப்புராயன் தெருவில் உள்ள குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் வசித்து வந்தவர் ரவுடி மவுலி (24). சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர் மீது அபிராமபுரம் காவல் நிலையத்தில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்னர் காலை சுமார் 10.30 மணியளவில் மவுலி இருசக்கர வாகனத்தில் மந்தைவெளியில் உள்ள ரேஷன் கடைக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.

மந்தைவெளி ரயில்வே பாலம் அருகே வரும் போது அவரை பின் தொடர்ந்து வந்த 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று மவுலியை வழிமறித்து கத்தியால் வெட்டி விட்டு பைக்கில் தப்பிச் சென்றனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த மவுலியை பொதுமக்கள் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மவுலி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து மயிலாப்பூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். அதில், மவுலியும், மயிலாப்பூர் பகுதியை சேர்ந்த ரவுடி கவுதம் (19), ரவுடி விஜயகுமார் (எ) பிக் ஷோ (23), சபரி, மணி, புருஷோத்தமன் ஆகியோர் நண்பர்களாக இருந்து வந்துள்ளனர். பின்னர் மவுலிக்கும் அவரது நண்பர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது.

மவுலியும், விஜயகுமாரும் நீண்டகாலமாக பகைமை கொண்டிருந்தவர்கள். மவுலி தனது மூத்த சகோதரியுடன் சமூக ஊடகங்கள் மூலம் நட்பு கொள்வதை விஜயகுமார் எதிர்த்து வந்து உள்ளார். மவுலி அடிக்கடி குடிபோதையில், பல்வேறு நபர்களுடன் சண்டையிட்டு, விசாலட்சி தோட்டத்தில் உள்ள ஒரே ரவுடி நான்தான் என்று கூறி வந்து உள்ளார். கடந்த 5 வருடங்களாக இருவருக்கும் முன்பகை இருந்து வந்தது. இதனால் கடந்த 2 தினங்களுக்கு முன் கவுதம், விஜயகுமார் உள்ளிட்டோர் மவுலியை கொலை செய்து தப்பிச் சென்றனர் என விசாரணையில் தெரியவந்து உள்ளது.

இதையடுத்து, தப்பி ஓடிய கவுதம், விஜயகுமார், சபரி, மணி, நிரஞ்சன் உள்ளிட்டோரை பிடிக்க மயிலாப்பூர் போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர். நேற்று முன்தினம் மாலை கவுதம், நிரஞ்சன் ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த ரவுடி விஜயகுமார் (23), இந்திரா நகர் அருகே பதுங்கி இருப்பதாக மயிலாப்பூர் இன்ஸ்பெக்டர் அம்பேத்கருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் தலைமையிலான போலீசார், இந்திரா நகர் எம்ஆர்டிஎஸ் ரயில் நிலையம் அருகே பதுங்கி இருந்த விஜயகுமாரை சுற்றி வளைத்தனர். அப்போது, ​​விஜயகுமார் கத்தியை எடுத்து காவலர் தமிழரசனை தாக்கியுள்ளார். உடனே, போலீசார் சரணடையுமாறு எச்சரித்த போதிலும், அவர் தப்பிக்க முயன்றார். இதனால் இன்ஸ்பெக்டர் அவரது காலில் சுட்டுள்ளார். துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்த விஜயகுமார் அரசு ராயப்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், பின்னர் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் உள்ள குற்றவாளிகள் வார்டுக்கு மாற்றப்பட்டார். இந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திள்ளது. இது, ரவுடிகளிடம் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Mylapore ,Chennai ,Subbarayan Street ,Visalakshi Estate ,Mylapore, Chennai ,
× RELATED களியக்காவிளை அருகே பாரில் மோதல் பாஜ...