×

பரஸ்பரம் மோதிக்கொண்ட நிலையில் டிரம்புடன் கைகோர்த்த இந்திய வம்சாவளி மேயர்

வாஷிங்டன்: கடும் விமர்சனங்களை மறந்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும், நியூயார்க் நகரப் புதிய மேயரும் சந்தித்துப் பேசியது அரசியல் வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 4ம் தேதி நடந்த தேர்தலில் நியூயார்க் நகரத்தின் புதிய மேயராக ஜனநாயக சோசலிசவாதியான இந்திய வம்சாவளி ஜோஹ்ரான் மம்தானி வெற்றி பெற்றார். தேர்தல் பிரசாரத்தின் போது இவரை, ‘கம்யூனிசப் பைத்தியம்’ என்று அதிபர் டிரம்ப் கடுமையாக விமர்சித்திருந்ததுடன், இவர் வெற்றி பெற்றால் நியூயார்க் நகரத்திற்கான ஒன்றிய அரசின் நிதியை நிறுத்துவதாகவும் மிரட்டல் விடுத்திருந்தார்.

மம்தானியும் டிரம்பின் கொள்கைகளைத் தீவிரமாக எதிர்த்து வந்ததால், வரும் ஜனவரி 1ம் தேதி அவர் பதவியேற்ற பிறகு இருவருக்கும் இடையில் கடும் மோதல் போக்கு நீடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், அனைவரின் கணிப்பையும் பொய்யாக்கும் வகையில் வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்பை, மம்தானி நேரில் சந்தித்துப் பேசியது அரசியல் தலைகீழ் மாற்றமாகப் பார்க்கப்படுகிறது. மிகவும் சுமூகமாக நடந்த இந்தச் சந்திப்பின் போது, பொதுமக்களைப் பெரிதும் பாதிக்கும் விலைவாசி உயர்வு, சட்டம் – ஒழுங்கு மற்றும் குடியேற்றப் பிரச்னைகள் குறித்து இருவரும் விரிவாகப் பேசினர்.

சந்திப்புக்குப் பின் பேசிய டிரம்ப், மம்தானியை ‘பகுத்தறிவு மிக்க நபர்’ என்றும், ‘எதிர்காலத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பெறுவார்’ என்றும் பாராட்டியுள்ளார். இதேபோல், ‘கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் நகர மக்களின் நலனுக்காக ஒன்றிய அரசுடன் இணைந்து பணியாற்ற வேண்டியது அவசியம்’ என மம்தானி குறிப்பிட்டுள்ளார். எதிரும் புதிருமாக இருந்த இருவரும் மக்கள் நலனுக்காகக் கைகோர்த்துள்ளது அமெரிக்க அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Trump ,Washington ,US ,President Donald Trump ,New York City ,Democratic Socialist ,
× RELATED 19 மாகாணங்கள் சார்பில் எச்-1பிக்கு 1...