கடையம் அருகே பரிதாபம் ஆற்றில் குளித்த இளம்பெண் தண்ணீரில் மூழ்கி பரிதாப பலி

கடையம், ஜன. 7:  கடையம் அருகே ஆற்றில் குளித்த இளம்பெண் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். தென்காசி மாவட்டம் கடையம் அருகே ஏ.பி.நாடானூர் குமரன் குடியிருப்பைச் சேர்ந்தவர் ராமசாமி. கூலித்தொழிலாளி. இவரது மனைவி மாரிச்செல்வம். தம்பதிக்கு சுடலைவள்ளி (20),  அபிநயா (18) என இரு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இவர்களில் அபிநயா கடந்த ஆண்டு பிளஸ் 2 படித்து முடித்தார்.

கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் சுடலைவள்ளிக்கும், கடகநேரியை சேர்ந்த சதீஷ் என்பவருக்கும் திருமணம் நடந்தது. இந்நிலையில் அபிநயா, சுடலைவள்ளி, அவரது கணவர் சதீஷ் மற்றும் அவரின்  சகோதரிகள்  இன்பசுபா (11), இன்ஷியா (18) உள்ளிட்டோர்  கடையம் அருகே பாப்பாங்குளம் கடனா ஆற்றுப்பகுதிக்கு சென்று குளித்தனர். அப்போது சற்று அதிக அளவில் வந்த தண்ணீரில் எதிர்பாராதவிதமாக அபிநயா, சுடலைவள்ளி, இன்ஷியா ஆகிய மூவரும் அடித்துச் செல்லப்பட்டனர்.

இருப்பினும் சுடலைவள்ளி, இன்ஷியா ஆகிய இருவரையும் காப்பாற்றிய சதீஷ் உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் துணையுடன் அபிநயாவை  தீவிரமாகத் தேடினார். ஆனால், இதில் ஆற்றில் மூழ்கிய அபிநயாவை சிறிதுநேரம் கழித்து ஆற்றில் இருந்து சடலமாகத்தான் மீட்க முடிந்தது.

இதனிடையே தகவலறிந்து விரைந்து வந்த கடையம் போலீசார், அபிநயாவின் உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து ராமசாமி கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ரகுராஜன் வழக்குப் பதிந்து  விசாரித்து வருகிறார்.

Related Stories:

>