×

தேங்காப்பட்டணம் துறைமுக முகத்துவாரத்தை சீரமைக்க 77 கோடி நிதி ஒதுக்கி அரசாணை

நாகர்கோவில், ஜன.7:  குமரி மாவட்டம், தூத்தூர் மறை வட்ட தலைமை அலுவலகத்தில் மீனவப்பிரதிநிதிகள் மற்றும் பங்குதந்தையர்களுடனான கலந்துரையாடல் கூட்டம், தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி தளவாய்சுந்தரம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்  நிருபர்களிடம் தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி தளவாய்சுந்தரம் கூறியதாவது: குமரி மாவட்ட மீனவ மக்களின் குறைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு உடனுக்குடன் நிவர்த்தி செய்யப்பட்டு வருகிறது. தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தின் முகத்துவாரத்தை தூர்வாரி நீளத்தை அதிகரிக்க வேண்டும் என 8 கிராம மீனவ மக்கள் மற்றும் மீனவ பிரதிநிதிகள், தமிழ்நாடு முதலமைச்சர் குமரி மாவட்டத்திற்கு வருகை புரிந்தபோது கோரிக்கை வைத்தார்கள்.

உடனே நான் மீனவ மக்களின் கோரிக்கையை உடனடியாக ஏற்று தேங்காய்பட்டணம் மீன்பிடித் துறைமுகத்தின் முகத்துவாரத்தை சீரமைத்து நீளத்தை அதிகரிக்க வேண்டும் எனவும், மேலும் நீளத்தை அதிகரித்து முகத்துவாரத்தை சீரமைத்தால் தான் நாட்டுப்படகுகளும், இயந்திரப்படகுகளும் கரையிலிருந்து கடலுக்கும், கடலிருந்து கரைக்கும் எளிதாக சென்று வரமுடியும் எனவும் தெரிவித்தேன்.எனது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட முதலமைச்சர் தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தின் பிரதான முகத்துவாரத்தை 200 மீட்டர் நீளத்திற்கு நீட்டிப்பதற்கும், மீன்பிடி துறைமுகத்தை சேதத்திலிருந்து பாதுகாக்கவும், 36 மீட்டர் நீளமுள்ள முன்பகுதியை புதுப்பிக்கவும் 77 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அறிவித்தார்.தேங்காப்பட்டணம் துறைமுகத்தின் முகத்துவாரத்தை விரிவுபடுத்தவும், புதுப்பிக்கவும், துறைமுகத்தை சேதத்திலிருந்து பாதுகாக்கவும், 77 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது தற்போது அரசாணையாக வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கூட்டத்தில் தமிழ்நாடு அரசு ரப்பர் வளர்ப்போர் கூட்டுறவு விற்பனை சங்கத்தலைவர் ஜாண்தங்கம், தமிழ்நாடு மாநில மீன்வள கூட்டுறவு இணைய தலைவர் சேவியர் மனோகரன், பங்குத்தந்தையர்கள் டோனி ஹேம்லட், ரிச்சர்டு, ஆன்செல், அசிசி மற்றும் யூஜின், ஜீன்ஸ், ஜஸ்டின் ஆண்டனி, ஜோஸ் உட்பட மீனவ பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Govt ,
× RELATED சென்னை ராஜிவ் காந்தி அரசு...