×

மார்த்தாண்டம் சாலையில் குடிநீர் குழாய் பதிக்கும் பணி 18ம்தேதி மீண்டும் தொடக்கம்

மார்த்தாண்டம் ஜன.7 :  குழித்துறை நகராட்சியில் ரூ.72 லட்சம் செலவில் புதிய குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் தொடங்கப்பட உள்ளன. இந்த பணிகள் மார்த்தாண்டம் சந்திப்பில் இருந்து வெட்டுவெந்நி வரை நடக்கிறது. முன்னதாக கடந்த டிசம்பர் மாதம் பணிகள் தொடங்கப்பட்டது. நெருக்கடி மிகுந்த சாலையில் பள்ளம் தோண்டப்பட்டதால் போக்குவரத்து தடை ஏற்பட்டதோடு கடுமையான நெரிசலும் ஏற்பட்டது. இதையடுத்து மார்த்தாண்டம் தொழில் வர்த்தக சங்கம், மற்றும் நகர வர்த்தக சங்கத்தினர் பண்டிகை காலத்தில் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் தொடங்குவதால் வியாபாரிகளுக்கு வணிகம் பாதிக்கப்படுவதோடு பொதுமக்களுக்கும் சிரமம் ஏற்படுவதாகவும், எனவே கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு பின்னர் ஆலோசனை நடத்தி பணிகளை தொடங்க வலியுறுத்தி நகராட்சி கமிஷனரிடம் மனு அளித்தனர்.

இதையடுத்து பணிகள் நிறுத்தப்பட்டு தோண்டப்பட்ட சாலை பள்ளங்கள் நிரப்பப்பட்டன. தற்போது கிறிஸ்துமஸ், புத்தாண்டு முடிந்ததையொட்டி மீண்டும் பணிகளை தொடங்குவது குறித்த ஆலோசனை கூட்டம் கமிஷனர் மூர்த்தி தலைமையில் குழித்துறை நகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது. பொறியாளர் பேரின்பம் முன்னிலை வகித்தார். இதில் மார்த்தாண்டம் இன்ஸ்பெக்டர் செந்தில்வேல்குமார், போக்குவரத்து கிளை மேலாளர் ஸ்டாலின், நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் மரிய ஜோபின், தொலைதொடர்பு துறை அதிகாரிகள் ராதிகா, விஜயகுமார், மின்வாரிய பொறியாளர்கள் ஆல்பிரட் ஜோஸ்வா, சுனில் ராஜ், நகராட்சி அலுவலர் பிரபா, மார்த்தாண்டம் தொழில் வர்த்தக சங்க செயலாளர் ராஜா செல்வின்ராஜ் மற்றும் எஸ்பிஎல் நிறுவன அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆய்வு கூட்டத்தில் அதிகாரிகள் தரப்பில் பல்வேறு கருத்துக்கள், ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டது. தற்போது உள்ள சூழலில் உடனடியாக சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை சீரமைத்து பொங்கல் பண்டிகைக்கு பின் 18ம் தேதி முதல் பணிகளை மீண்டும் தொடங்குவது. இரவு நேரங்களில் பணி செய்யாமல் சாலையின் அடியில் போடப்பட்டுள்ள மின் கேபிள், தொலைதொடர்பு நெட் கேபிள்கள் சேதமடையாத வண்ணம் சம்பந்தப்பட்ட துறை பொறியாளர்கள் முன்னிலையில் பணிகளை செய்வது. ஒரு வார காலத்திற்குள் பணிகளை முடித்து தரமான சாலை அமைப்பது, பணிகளின்போது தெரிசலை சமாளிக்க  மார்த்தாண்டம் சந்திப்பு முதல்வெட்டு வெந்நி வரை ஒரு வழிப்பாதையாக மாற்றுவது, மேம்பாலம் வழியாக போக்குவரத்தை மாற்றி அமைப்பது உள்ளிட்ட ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டு முடிவு செய்யப்பட்டது.

Tags : Marthandam Road ,
× RELATED மார்த்தாண்டம் சாலையை சீரமைத்த போலீசார்