வேலூர், நவ.22: பூர்த்தி செய்த எஸ்ஐஆர் படிவங்கள் ஆன்லைன் செயலியில் பதிவேற்றும் பணிகள் தாலுகா அலுவலகங்களில் தீவிரமாக நடந்து வருகிறது. தமிழகத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப்பணி (எஸ்ஐஆர்) நடந்து வருகிறது. இதற்காக கடந்த 4ம் தேதி முதல் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்துக்கான படிவங்கள் வாக்காளர்களிடம் வழங்கப்பட்டன. இதில் பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் பெறப்பட்டு ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் தாசில்தார் தலைமையில், வாக்குச்சாவடி அலுவலர்கள், இல்லம்தேடி கல்வி தன்னார்வலர்கள், இ சேவை மையம் நடத்துபவர்கள், அரசின் பல்வேறு துறைகளை சேர்ந்த இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்களை கொண்டு படிவங்களில் உள்ள விவரங்கள் அதற்கான செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.
வேலூர் தாலுகா அலுவலகத்தில் இப்பணி தீவிரமடைந்துள்ளது. இங்கு வேலூர் மற்றும் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் பூர்த்தி செய்து பெறப்பட்ட படிவங்களை செயலியில் பதிவேற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது என்று தாசில்தார் வடிவேலு தெரிவித்தார். இந்த நிலையில், எஸ்ஐஆர் படிவங்களில் உள்ள சந்தேகங்களை நிவர்த்தி செய்து வாக்காளர்களிடம் விவரங்களை பெற்று அப்படிவங்களை பெறும் வகையில் இன்றும் (சனிக்கிழமை), நாளையும் அந்த வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. இங்கு கடந்த 2002ம் ஆண்டு நடந்த வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த விவரங்களில் உள்ள சந்தேகங்களை கேட்டும், விவரங்களை பெற்றும் படிவங்களை பூர்த்தி செய்து வாக்காளர்கள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
