பெற்றோர்களிடம் தலைமை ஆசிரியர்கள் கருத்து கேட்பு: பள்ளிகள் திறக்க அதிகளவில் ஆதரவு

வேலூர், ஜன.7: அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பெற்றோர்களிடம் நடந்த கருத்து கேட்பில் பெரும்பாலானவர்கள் பள்ளிகளை திறக்க ஆதரவு தெரிவித்தனர். கர்நாடக மாநிலத்தை பின்பற்றி தமிழகத்திலும் பொங்கல் விடுமுறைக்கு பின்னர் 10 மற்றும் 12ம் வகுப்புகளை பள்ளிகளில் தொடங்குவது தொடர்பாக பெற்றோர்களிடம் கருத்து கேட்டு முடிவு செய்யும் என்று தமிழக அரசு அறிவித்தது. இந்த கருத்து கேட்புக்கூட்டம் நேற்று தொடங்கி வரும் 8ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெறும் என்றும், பெற்றோர்கள் தங்கள் கருத்துக்களை தலைமை ஆசிரியர்களிடம் தெரிவிக்கலாம் என்றும் அறிவித்தது.

அதன்படி, நேற்று காலை வேலூர் மாவட்டத்தில் அனைத்து அரசு, அரசு நிதியுதவி மற்றும் தனியார் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பெற்றோர்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் தொடங்கியது. கூட்டம் நாளை 8ம் தேதி வரை நடக்கிறது. இதில் பெற்றோர்கள் மட்டுமின்றி பெற்றோர் ஆசிரியர் கழகத்தினரும் கலந்து கொண்டனர். கருத்து கேட்பில் பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளிகளை திறப்பதற்கு ஆதரவு தெரிவித்தனர். ஒரு சிலர் மட்டும் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் முன்னேற்பாடுகளை மேற்கொண்ட பிறகு பள்ளிகளை திறக்கவும், ஒரு சிலர் பள்ளிகளை திறக்கக்கூடாது என்றும் கருத்து தெரிவித்தனர்.

இதுதொடர்பாக முதன்மை கல்வி அலுவலர் குணசேகரனிடம் கேட்டபோது, ‘மாவட்டத்தில் 279 உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 175 பள்ளிகளில் இன்று (நேற்று) கூட்டம் நடந்தது. இதில் பெற்றோர்கள் பெரும்பான்மையானவர்கள் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும். தங்கள் பிள்ளைகளின் கல்வி பாதிக்கக்கூடாது என்றே கருத்து தெரிவித்தனர்’ என்றார்.

Related Stories:

>